வணிக கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி

Mercantile Cricket Association (MCA) Premier League

1016
Sri Lanka Cricket

வணிக ​​கிரிக்கெட் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் வணிக ​​ப்ரீமியர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் (Mercantile Cricket Association (MCA) Premier League) இலங்கை கிரிக்கெட் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்றை களமிறக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் நடைபெறவுள்ள வணிக ​​ப்ரீமியர் லீக் (முன்னணி வணிக நிறுவனங்கள் போட்டியிடும்) 50 ஓவர் தொடரில், இலங்கை கிரிக்கெட்டின் இளம் அணியொன்றை களமிறக்குமாறு, வணிக ​​கிரிக்கெட் சங்கம், இலங்கை கிரிக்கெட் சபையிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

வணிக ​​கிரிக்கெட் சங்கத்தின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ந்துவரும் வீரர்கள் அணியொன்றை தொடரில் விளையாட வைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த தொடரில், இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி குழாம் மற்றும் வளர்ந்துவரும் குழாம்களில் இருந்து வீரர்களை உள்ளடக்கிய அணியொன்று தெரிவுசெய்யப்படவுள்ளது. அத்துடன், இளம் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில், இந்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில், நாட்டின் முன்னணி ஆறு தனியார் துறை நிறுவனங்கள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி முதல் மே 2ம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க