சுழல் பந்துவீச்சில் எதிரணிகளை மிரட்டும் யாழ். வீரர் விதுசன்

Major Club Emerging 3-Day Tournament 2022

313

வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ்ப்பாண வீரர் தீஷன் விதுசன் எஸ்.எஸ்.சி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வளர்ந்துவரும் கழக அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ். வீரர் தீஷன் விதுசன் மூவர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

>>மூவர்ஸ் அணிக்காக ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய விதுசன்

தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சு பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் இவர், ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றுமுடிந்த எஸ்.எஸ்.சி. வளர்ந்துவரும் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களிப்பை வழங்கியுள்ளார்.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூவர்ஸ் அணி 292 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, எஸ்.எஸ்.சி. அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், விதுசன் 8 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய மூவர்ஸ் அணி தினுக டில்ஷானின் சதத்துடன் (111) 258/4 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்த, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.சி. அணி 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. மூவர்ஸ் அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக விதுசன் 10 ஓவர்கள் பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்களுடன் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அதேநேரம், விதுசன் இந்த தொடரில் 12 இன்னிங்ஸ்கள் விளையாடி ஒட்டுமொத்தமாக 38 விக்கெட்டுகளை குவித்துள்ளதுடன், தொடரில் அதிக விக்கெட்டுகள் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு யாழ். வீரரான தெய்வேந்திரம் டினோஷன் எஸ்.எஸ்.சி அணிக்காக விளையாடி வருதுடன், இவர் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<