பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு புதிய யோசனை கூறிய SLC

225
Bangladesh Cricket

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் விவகாரத்தில் முரண்பாடுகள் எழுந்து வருகின்றன.

அந்த அடிப்படையில் தற்போது, இலங்கை கிரிக்கெட் சபை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு புதிய ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளது. இலங்கை கொவிட்-19 அதிரடிப்படை 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை முன்வைத்துள்ள நிலையில், பங்களாதேஷ் வீரர்கள் தொடருக்கு முன்னதான 7 நாட்கள் தங்களுடைய நாட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கவும், பின்னர் இலங்கையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் ஆலோசனையொன்றை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முன்மொழிந்துள்ளது.

>> 14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்க்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

இலங்கையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் கொவிட்-19 அதிரடிப்படையினரின் ஆலோசனைக்கு அமைய, வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் வருபவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தற்போது இலங்கையில் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும், சுமார் 7 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் வீரர்கள் விளையாடாத நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றது.

ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் சபை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவித்திருந்த போதும், பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அழுத்தத்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை கொண்டுவரும் முயற்சியில் இலங்கை கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டியது

ஆனால், இலங்கை வைத்திய அதிகாரிகள் அதனை நிராகரித்த நிலையில், மீண்டும் 14 நாட்கள் என்ற விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை முன்வைத்தது. இதற்கு தங்களுடைய முழுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தாங்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை அடிப்படையாக கொண்டு திட்டங்களை வகுத்து வருவதாக அறிவித்திருந்தது

Bangldesh Cricket
இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, பங்களாதேஷ் வீரர்கள் கலந்துரையாடிய புகைப்படம்

அதுமாத்திரமின்றி, கொவிட்-19 காலப்பகுதியில் ஏனைய நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கவும் இல்லை என பங்களாதேஷ் குற்றம் சுமத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் (16) இலங்கை மற்றும் பங்களாதேஷ் தொடர் மற்றும் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் என்பவற்றை நடத்துவதற்கான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கை கிரிக்கெட் சபை, கொவிட்-19 அதிரடிப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது.

>> Video – கொரோனாவினால் மீண்டும் தள்ளிப் போகும் பங்களாதேஷ் தொடர்? |Sports RoundUp – Epi 132

இந்த கலந்துரையாடலின் அடிப்படையில், தொடர்களை நடத்துவதற்கான ஆதரவினை கொவிட்-19 அதிரடிப்படை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், தொடர்களை நடத்துவதற்கான திட்ட வரைவு ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அமைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன, நாம் கொவிட்-19 அதிரடிப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். இதன்போது அனைவரும் தொடரை நடத்துவதற்கு தங்களுடைய ஒப்புதலை வழங்கியிருந்தனர். ஆனால், வைத்தியர்கள் இதுதொடர்பில் எதனை கூறுகின்றனர் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்என்றார்

இலங்கை கிரிக்கெட் சபையை பொருத்தவரை, இங்கிலாந்தைப் போன்று மைதானத்தையொட்டி ஹோட்டல்கள் இல்லாத விடயம் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அதுமாத்திரமின்றி இலங்கை சுகாதார அமைச்சுடன் மேலும் கலந்துரையாடல்களை எதிர்வரும் சில நாட்களில் மேற்கொண்டு, சிறந்த திட்டம் ஒன்றை உருவாக்க இலங்கை கிரிக்கெட் சபை தொழிற்பட்டு வருகின்றது. எனவே, இந்த தொடரானது ஒக்டோபர் மாத மத்திய பகுதியில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<