ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறிய இலங்கை

549

தமது சொந்த மைதானத்தில் வைத்து  இலங்கையுடனான டெஸ்ட் தொடரினை பறிகொடுத்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள அதேவேளை இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் வைட் வொஷ் செய்த இரண்டாவது அணியாகவும் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான்,  அவுஸ்திரேலியாவால் 2002/03 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரொன்றில் சொந்த மண்ணில் வைத்து வைட் வொஷ் செய்யப்பட்டிருந்தது.

தில்ருவான் பெரேராவின் அதிரடி சுழலினால் டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும்…

இத்தொடரின் முடிவானது இலங்கை அணிக்கு புதிய டெஸ்ட் தரவரிசையில் நான்கு புள்ளிகளை பெற்றுத்தந்துள்ளது. இதனால், தரவரிசையில் இலங்கை அணியின் மொத்தப் புள்ளிகள் 90 இலிருந்து 94 ஆக அதிகரித்துள்ளது. மறுமுனையில் பாகிஸ்தான் அணி ஐந்து புள்ளிகளை இழந்துள்ளது. இதனால் அவர்களது மொத்தப் புள்ளிகள் 93 இலிருந்து 88 ஆகக் குறைந்துள்ளது.

தற்போது 94 புள்ளிகளுடன் தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கும் இலங்கை அணியானது தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவை  (97 புள்ளிகள்) விட வெறும் மூன்று புள்ளிகளே பின்தங்கி காணப்படுகின்றது. அதேபோன்று தரவரிசையில் 8 ஆம் இடத்தில் காணப்படும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் (75 புள்ளிகள்)  பாகிஸ்தானுக்கும் 13 புள்ளிகள் வித்தியாசமாக உள்ளன.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுடன் (125 புள்ளிகள்) நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணியானது டெஸ்ட் தொடரொன்றில் அடுத்ததாக மோதுகின்றது. அதேவேளையில் பாகிஸ்தான் அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதனையடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்கேற்கும்.

இவை ஒரு புறமிருக்க பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட்  தொடரில் 2-0 என வெற்றி பெற்றிருக்கும் பாப் டு ப்ளேசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஐ.சி.சி இன் புதிய தரவரிசைப் பட்டியலில் இரண்டு புள்ளிகளை பெற்று மொத்தமாக 111 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. இதேவேளை, தென்னாபிரிக்காவுடன் தொடரினை இழந்த பங்களாதேஷ் 72 புள்ளிகளுடன் தரவரிசையில் ஒன்பதாம் இடத்தில் காணப்படுகின்றது.