LPL அணிகளின் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்களின் விபரம் வெளியானது!

Lanka Premier League 2022

4676

இலங்கையில் செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான அணிகளின் தலைவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்தமுறை போன்று இந்த ஆண்டு LPL தொடரிலும் 5 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், தம்புள்ள அணியின் பெயர் மாத்திரம் தம்புள்ள ஓரா என மாற்றப்பட்டுள்ளது. ஏனைய நான்கு அணிகளும் கொழும்பு ஸ்டார்ஸ், ஜப்னா கிங்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் என்ற பெயர்களின் கீழ் களமிறங்குகின்றன.

>> LPL தொடருக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்வது எப்படி?

அதன்படி இம்முறையும் ஜப்னா கிங்ஸ் அணியானது இலங்கை அணியின் முன்னாள் வீரர் திசர பெரேராவின் தலைமையில் களமிறங்கவுள்ளதுடன், அந்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக திலின கண்டம்பி பெயரிடப்பட்டுள்ளார். இந்த இருவரின் கீழ் ஜப்னா கிங்ஸ் அணி இரண்டு தடவைகளும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

அதேநேரம் ஜப்னா கிங்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக மரியோ வில்லவராயன், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜெஹான் முபாரக் மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக விமுக்தி தேசப்பிரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஏனைய அணிகளை பொருத்தவரை கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ், கண்டி பல்கோன்ஸ் அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க மற்றும் தம்புள்ள ஓரா அணியின் தலைவராக தசுன் ஷானக ஆகியோர் செயற்படவுள்ளனர்.

பயிற்றுவிப்புக்குழாத்தை பொருத்தவரை கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மொயீன் கான் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உதவி பயிற்றுவிப்பாளராக உமர் குல் மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக முஹமட் வகார் அலி செய்ட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆரம்பத்தில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்த மிக்கி ஆர்தர் தம்புள்ள ஓரா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இந்த அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ருவான் பீரிஸ் ஆகியோர் செயற்படுகின்றனர்.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருவான் கல்பகே, உதவி பயிற்றுவிப்பாளராக சமில கமகே, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக சம்பத் பெரேரா மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உபுல் சந்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பல்கோன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பியால் விஜேதுங்க, உதவி பயிற்றுவிப்பாளராக தரங்க தம்மிக்க மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக மனோஜ் அபேவிக்ரம ஆகியோர் செயற்படவுள்ளனர்.

LPL தொடர் செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<