IPL அணிகளால் தக்கவைக்கப்பட்ட 4 இலங்கை வீரர்கள்!

Indian Premier League 2023

676

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

IPL வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் தொடர்பிலான விபரத்தை நேற்று செவ்வாய்க்கிழமைக்கு (15) முதல் IPL நிர்வாகத்திடம் வழங்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

IPL தொடரிலிருந்து ஓய்வுபெறுகிறார் கீரன் பொல்லார்ட்!

அதன் அடிப்படையில்  ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் விபரத்தை வெளியிட்டிருந்தது.

இதில் கடந்த ஆண்டு அணிகளால் வாங்கப்பட்ட இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்களில் 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், 2 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் பானுக ராஜபக்ஷ, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வனிந்து ஹஸரங்க, சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக மதீஷ பதிரண மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சாமிக்க கருணாரத்ன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சர்வதேச கிரிக்கெட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலரும் இம்முறை IPL தொடரிலிருந்து அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய வீரர்களாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த கீரன் பொல்லார்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை அணி? | Sports RoundUp – Epi 225

அத்துடன் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய மே.தீவுகளின் முன்னணி சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர், துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் மனிஷ் பாண்டி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அதுமாத்திரமின்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வீரர்களான பெட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்னர். அதேநேரம் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் டுவைன் பிராவோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<