சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குப் பின்னர் அணியை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் அணியின் தூண்களாக இருந்த குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்கள். சங்கக்கார இதற்கு பின்னரும் ஒருசில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தபோதும் அது அணிக்கு பலம் சேர்க்கவே தவிர அவரது இடம் நிரந்தரமானதாக இருக்கவில்லை.

எனவே உலகக் கிண்ண போட்டிக்கு பின்னரான இலங்கை அணியில் தளம்பல்கள் ஏற்படுவது எதிர்பார்த்த ஒன்றே. அணியை அடுத்த உலகக் கிண்ண போட்டிக்கு முன்னர் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருதற்கு தேர்வுக் குழுவினரும் இலங்கை கிரிக்கெட் சபையும் மிகப்பெரிய சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

சங்கா. மஹேல தவிர அணியின் மற்றொரு அனுபவ வீரர் டில்ஷானும் ஓய்வுபெறும் தறுவாயிலேயே இருந்தார். ஆனால் இந்த மூன்று வீரர்களுக்கு மாற்றாக அணியில் நிரந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளக் கூடிய வீரர்கள் இருக்கவில்லை.

அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தவிர்த்து தினேஷ் சந்திமால் லஹிரு திரிமான்ன, குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன போன்ற வீரர்களே துடுப்பாட்டத்தில் பலம் சேர்ப்பவர்களாக இருந்தனர்.

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை லசித் மாலிங்கவும் டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத்துமே அணியில் திருப்பங்கள் ஏற்படுத்தக் கூடிய வீரர்களாக இருந்தனர். எனவே புதிய பலமான பந்துவீச்சு வரிசை ஒன்றை தேட வேண்டி நிலைமையும் இருந்தது.

இந்த சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணியின் சரிவுகள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். என்றாலும் அதனை எதிர்பாராத ஒன்று போல் தரவுகளை வைத்து சித்தரிக்க முயற்சிப்பது மேலும் சிக்கலையே ஏற்படுத்துவதாக உள்ளது.

உலகக் கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் பின்னடைவுகளை சந்தித்தாலும் இவ்வாறான நிலைமை எல்லா அணிகளுக்கும் ஏற்படும் என்பதே உண்மை.

சவாலுக்கு முகம்கொடுக்க நான் தயாராக உள்ளேன் – கபுகெதர

அதாவது இலங்கை அணியின் 2015 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் மோசமான வெற்றி/தோல்வி விகிதத்தை பெற்றிருக்கும் பலம் கொண்ட அணிகள் வரிசையில் மேற்கிந்திய தீவுகளே முதலிடத்தில் காணப்படுகிறது.   

    அணி   போட்டி வெற்றி தோல்வி வெ/தோ விகிதம்
மேற்கிந்திய தீவுகள்       32 07 22 0.318
இலங்கை       48 16 27 0.592
பாகிஸ்தான்       43 20 22 0.909
நியூசிலாந்து       49 26 21 1.238

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி ஸ்திர நிலையை அடைவதற்கு ஏகப்பட்ட காரணிகள் இடையூறாக இருந்தன. அணியின் காயங்கள், எதிர்பார்த்த வீரர்கள் தொடர்ச்சியாக திறமையை காட்டாமை மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் போன்றன குறிப்பிடத்தக்கவையாகும்.

சனத் ஜயசூரியவுக்கு பின்னர் அவரின் பாணியிலேயே ஆடும் குசல் பெரேரா இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டபோதும் 2015 டிசம்பர் மாதத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடைக்கு உள்ளானதன் பின்னர் அந்த குற்றச்சாட்டில் இருந்து ஐ.சி.சி வாபஸ் பெற்றது அவரது கிரிக்கெட் வாழ்வில் மட்டுமன்றி அணியின் திறமையிலும் சரிவை ஏற்படுத்தியது.

அதேபோன்று அணி முகம்கொடுத்துவரும் தொடர்ச்சியான காயங்கள் பெரும் பின்னடைவாக உள்ளது. இலங்கை அணியின் காயங்கள் வரிசையில் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, நுவன் குலசேகர போன்ற சிரேஷ்ட வீரர்களும் இந்த காயங்களில் இருந்து தப்பவில்லை. இதனால் ஸ்திரமான 15 பேர் குழாம் ஒன்றை தெரிவு செய்வதில் தேர்வுக் குழுவினர் தொடர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது பற்றி தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரியவும் அண்மைய தினத்தில் சுட்டிக்காட்டி இருந்தார். “பதினைந்து வீரர்களைத் தேர்வு செய்து, அவர்கள் காயங்கள் இன்றி ஓர் ஆண்டு வரை விளையாடுவதை பார்க்க நானும் ஆசைப்படுகிறேன். அவ்வாறு இருந்தால் எமது பணியும் இலகுவாக இருக்கும்” என்று ஜயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணியே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகமான வீரர்களை பயன்படுத்திய அணியாக காணப்படுகிறது.

அணி   போட்டி வீரர்களின் எண்ணிக்கை
இலங்கை 43 43
அவுஸ்திரேலியா 45 34
இந்தியா 33 34
பாகிஸ்தான் 31 34
ஜிம்பாப்வே 39 32

இலங்கை அணி இந்த ஆண்டில் குறிப்பிடும்படி சிறப்பாக விளையாடாதபோதும் சர்வதேச அரங்கில் பலம் கொண்ட அனைத்து அணிகளும் தனது முக்கிய வீரர்களை இழக்கும்போது இவ்வாறான நெருக்கடிகளை சந்திப்பது வழக்கமானதாகும். 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியா அசைக்க முடியாத அணியாக இருந்தது. ஸ்டிவ் வோ, கிளென் மெக்ராத், ஷேன் வோர்ன், அடம் கில்கிறிஸ்ட் கடைசியாக மைக்கல் கிளார்க் வரையும் வலுவான அணியாக இருந்த அவுஸ்திரேலியா தற்போது ஒரு சராசரி அணியாக மாறியுள்ளது.

குறிப்பாக அவுஸ்திரேலிய அணி கடந்த 20 ஆண்டுகளில் தனது மோசமான பெறுபேற்றை பெற்ற ஆண்டுகளாக 1997 மற்றும் 2012 ஆம் ஆண்டுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1997இல் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி/தோல்வி விகிதம் 0.538 ஆகும். அந்த ஆண்டில் அவுஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் மாத்திரமே வெல்ல முடிந்தது. அதற்கு முந்திய ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்ற பின்னர் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மாற்றங்களே இந்த பின்னடைவுக்கு காரணமாக இருந்தது.

தனது மாய சுழலுக்காக பாராட்டு மழையில் நனையும் அகில தனன்ஞய

குறிப்பாக 1996 உலகக் கிண்ண போட்டிக்கு சிறிது காலத்தின் பின்னர் அணித் தலைவர் மார்க் டெய்லர் ஓய்வு பெற்று ஸ்டிவ் வோவின் தலைமையில் அந்த அணி புதிதாக கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. 2012ஆம் ஆண்டில் ரிக்கி பொண்டிங், பிரெட் லீ, மைக்கல் ஹஸி போன்ற முன்னணி வீரர்கள் விடைகொடுத்தபோது அணியில் தளம்பல் ஏற்பட்டிருந்தது.

இலங்கை அணி அதிக ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்த ஆண்டாக 1999ஆம் ஆண்டு காணப்படுகிறது. அப்போது இலங்கை அணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, துடுப்பாட்ட ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உட்பட பெரும்பாலான வீரர்கள் இருந்தனர். என்றாலும் அந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி அடுத்த சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியது. என்றாலும் அடுத்த உலகக் கிண்ணம் 2003ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்றபோது சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை அணி அரையிறுதி வரை முன்னேறியது.

இலங்கை அணி அதிக தோல்விகள் பெற்ற ஆண்டுகள்

ஆண்டு போட்டி வெற்றி தோல்வி
1999 34 12 20
1985 19 02 16
2012 33 14 16
2002 32 15 15
2006 36 19 15

இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக பின்னடைவுகளை சந்தித்திருந்தபோதும் அடிப்படையில் அணியின் திறன் குறையவில்லை. இலங்கை அணி இந்த காலப்பிரிவில் 5.40 ஓட்ட சராசரியை தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு 32.62 என்ற பந்துவீச்சு சராசரியையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆடிய குசல் மெண்டிஸ் துப்பாட்டத்தில் இலங்கை அணிக்கு பெரும் நம்பிக்கை தந்து வருகிறார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஒரே இலங்கை வீரர் என்பதோடு சர்வதேச அரங்கில் 21 வீரர்களில் ஒருவர் ஆவார். நடப்பு ஆண்டை பொறுத்தவரை விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் காணப்படுகிறார். இந்த ஆண்டில் அவர் 15 ஒருநாள் போட்டிகளில் 679 ஓட்டங்களை பெற்றிருக்கிறார். இவரது ஓட்ட சராசரி 45.26 ஆகும். கடந்த ஆண்டுகளை பார்த்தோமானால் இவர்களை தவிர தனுஷ்க குணதிலக்க, அசேல குணரத்ன போன்ற வீரர்களும் அதிக ஓட்டங்களை பெற்று நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய பல்லேகலையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியது அணிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடப்பு ஆண்டில் ஆறு அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழு வீரர்களில் ஒருவராக தனன்ஜய உள்ளார்.

அதிலும் தனன்ஜய இந்த போட்டியில் தனது 15ஆவது பந்தில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு ஐந்தாவது விக்கெட்டை 27ஆவது பந்தில் பதம்பார்த்தார். அதாவது 2000ஆம் ஆண்டு தொடக்கம் தனன்ஜயவை விடவும் குறைவான பந்துகளில் மூன்று பந்துவீச்சாளர்கள் மாத்திரமே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதன் விபரம்,

வீரர் பந்துகள் போட்டி விபரம்
மொஹமட் சமி         11 நியூசிலாந்துக்கு எதிராக லாகூரில், 2001
சகூர் கான்         12 நியூஸிலாந்துக்கு எதிராக நேபியரில், 2012
மோர்னி மோர்கல்         12 அயர்லாந்துக்கு எதிராக டுபாயில், 2017
அகில தனன்ஜய       13 இந்தியாவுக்கு எதிராக பல்லேகலையில், 2017

இலங்கை அணி தற்போதைய நிலையில் ஒரு தளம்பலில் இருந்தபோதும் அது எதிர்காலத்தில் ஸ்திர நிலையை பெறுவதற்கான அனைத்து அறிகுறிகளையும் பார்க்க முடிகிறது.

“கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்த திறமையை வெளிக்காட்டும் நாடாக இருந்தாலும் ஒரு கடினமான நிலையை தாண்ட வேண்டிய சுழற்சி முறை அனைத்து நாடுகள், அணிகளுக்கும் ஏற்படக்கூடியதாகும். இலங்கை மூன்று வகை கிரிக்கெட்டிலும் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பாக செயற்படுகிறது. நாம் கடினமான நிலையை கடந்து வந்ததை மறந்துவிடக்கூடாது. எம்மிடம் திறமை இருக்கிறது, திறன் இருக்கிறது. நாம் கடுமையாக உழைக்கிறோம், எமக்கு உற்சாகமும் உங்களது ஆதரவுமே தேவைப்படுகிறது” என்று இலங்கை ஒருநாள் அணித் தலைவர் உபுல் தரங்க கூறுவதை கிரகித்தால் இலங்கை அணியின் நம்பிக்கையான எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருக்காது.