அனைத்து வீரர்களும் ஓர் அணியாக ஒன்றிணைந்திருக்கும் நிலையில் அணியை வெற்றிபெறச் செய்து எமது திறமையை நிரூபிப்போம் என்று இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சாமர கபுகெதர உறுதிபூண்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பல்லேகலையில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தபோதும் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடிந்தது. குறிப்பாக அகில தனஞ்சய இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையை சாய்த்து அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

“கடந்த போட்டியில் நாம் விளையாடிய முறை மற்றும் எமது போராட்டம் காரணமாக அணியினர் உற்சாகத்துடன் உள்ளனர். ஓர் அணியாக வீரர்கள் ஒன்றிணைந்து உள்ளனர்” என்று கபுகெதர குறிப்பிட்டார்.

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நாளை (27) நடைபெறவுள்ளது. எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்க தவறிய இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்கவுக்கு ஐ.சி.சி இரண்டு போட்டிகளில் தடை விதித்துள்ளது. இதனால் உப தலைவர் சாமர கபுகெதர இலங்கை அணித் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் கபுகெதர இதற்கு முன் இலங்கை அணிக்கு தலைமை பொறுப்பை வகித்ததில்லை. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒருநாள் தலைவராக செயற்படவிருக்கும் நான்காவது வீரர் கபுகெதர ஆவார்.

தனது மாய சுழலுக்காக பாராட்டு மழையில் நனையும் அகில தனன்ஞய

தனது மாய சுழலுக்காக பாராட்டு மழையில் நனையும் அகில தனன்ஞய

அண்மைய காலங்களில், தொடர் தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருந்த இலங்கை

“நான் பாடசாலை அணிக்கு, மாகாண அணிக்கு, கழக அணிக்கு தலைவராக செயற்பட்டிருக்கிறேன். நான் எல்லா வகை முதல்தர போட்டிகளிலும் தலைவராக இருந்திருக்கிறேன். எனினும் நாட்டுக்காக அணித் தலைமை பொறுப்பை ஏற்பது சவாலாகவே இருக்கும். நான் அந்த சவாலுக்கு தயாராக உள்ளேன்” என்று கபுகெதர குறிப்பிட்டார்.

நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பிலான இன்று (26) நடந்த ஊடக சந்திப்பிலேயே கபுகெதர இதனை தெரிவித்தார்.

இலங்கை அணி நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் தொடர் வெற்றி ஒன்றுக்காக அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றிபெறுவது கட்டாயமாகியுள்ளது. குறிப்பாக 2019 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி நேரடி தகுதி பெற இதில் இரண்டு போட்டிகளில் வெல்வது அவசியமாகும்.

தற்போது ஒருநாள் தரவரிசையில் 88 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை மேற்கிந்திய தீவுகளை விடவும் 10 புள்ளிகளையே மேலதிகமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை இரண்டு போட்டிகளை வென்றாலேயே 90 ஆக புள்ளிகளை உயர்த்தி தனது எட்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமாக உள்ளது.

எனினும் இந்த நெருக்கடிகளை விடவும் நாளைய போட்டியில் எவ்வாறு விளையாடுவது என்பது பற்றியே அதிக அவதானம் செலுத்தி இருப்பதாக கபுகெதர குறிப்பிட்டுள்ளார்.

“அந்த விடயங்களை விடவும் நாளைய போட்டியில் நாம் செய்ய வேண்டிய விடயங்கள் பற்றியே நாம் அதிக அவதானம் செலுத்தி இருக்கிறோம். அடுத்து வரும் போட்டு மற்றும் அடுத்த மூன்று போட்டிகள் பற்றியே நாம் அதிக அவதானம் செலுத்தி இருக்கிறோம். நாம் அதிகம் முன்னோக்கி சிந்திக்க வேண்டிய நேரமல்ல இது. நாளைய போட்டியை எப்படி வெற்றி பெறப்போகிறோம் என்பது பற்றியே திட்டமிட்டு வருகிறோம்” என்றார் கபுகெதர.

அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதற்கு இறுதிக் காலக்கெடு வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதியாகும். இதற்குள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகளே நேரடியாக தகுதி பெற முடியும். ஏனைய அணிகள் தகுதிகாண் போட்டியில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.

எவ்வாறாயினும் இலங்கை அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்து விளையாடும் தனது ஆறு ஒருநாள் போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றாலே தரவரிசையில் இலங்கையை தசம புள்ளிகளால் முந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சந்தித்தது போன்றே ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி காயங்களால் நெருக்கடியை சந்தித்து வருகின்றது. தனுஷ்க குணதிலக்க தோள்பட்டை உபாதை காரணமாக விலகி இருப்பதோடு அவருக்கு பதில் லஹிரு திரிமான்ன அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தரங்கவின் இடத்திற்கு டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், “இலங்கை அணியில் ஒவ்வொரு தினத்தில் ஒவ்வொரு வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். அணிக்குள் ஏதாவது குழப்பம் இருக்கிறதா?” என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கபுகெதர,

“அணியில் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு வீரர்கள் மாற்றப்படவும் இல்லை. சந்திமால், திரிமான்ன இருவரும் அணியில் சேர்க்கப்பட்டது காயம் ஒன்று மற்றும் உபுல் தரங்கவின் போட்டி தடை போன்ற காரணத்திலாகும். அதனைத் தவிர்த்து இலங்கை குழாமில் எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. கடந்த போட்டியில் நாம் செய்த மாற்றங்கள் அணியின் திட்டத்திற்கு அமைய மூலோபாய ரீதியிலான மாற்றங்களேயாகும்.

இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. அணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லோரும் ஒன்றுபோல் ஒற்றுமையாக உள்ளனர். அணியாக ஒன்றுபட்டு விளையாடவே நாம் எதிர்பார்த்திருக்கிறோம்” என்று கபுகெதர பதிலளித்தார்.