ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டியில் குரோஷிய அணி துருக்கியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2ஆவது சுற்றை எட்டும்.

பெரிஸ் நகரில் நேற்று அரங்கேறிய ‘டி’பிரிவு லீக் ஆட்டத்தில் குரோஷியாவும், துருக்கியும் மோதின. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க வரிந்து கட்டி நின்ற போதிலும் பலன் குரோஷியாவுக்குத் தான் கிட்டியது. 41ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் லூக்கா மாட்ரிச், 25 மீட்டர் தூரத்தில் இருந்து தூக்கி உதைத்த பந்து சூப்பராக கோல் வலைக்குள் நுழைந்தது. இதன் பின்னர் குரேஷிய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. டாரிஜோ ஸ்ர்னா, பெரிசிச், புரோஜோவிச் உள்ளிட்டோர் அடித்த ஷாட்கள் கம்பத்தில் பட்டு நழுவின. அவர்களின் சில வாய்ப்புகளை துருக்கி கோல் கீப்பர் வோல்கன் பாபாகன் முறியடித்தார். இறுதியில் குரோஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது. ஐரோப்பிய கால்பந்தில் துருக்கி அணி குரூப் சுற்றில் ஒரு முறை கூட தொடக்க ஆட்டத்தில் வென்றது கிடையாது. அந்த சோகம் இந்த முறையும் தொடர்கிறது.

இங்கிலாந்து – ரஷியா போட்டி சமநிலையில்

முன்னதாக நேற்று முன்தினம் இரவு மார்செலி நகரில் நடந்த ‘பி’பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தும், ரஷியாவும் கோதாவில் குதித்தன. முதல் வினாடியில் இருந்தே இரு அணியினரும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். முதல் பாதியில் பந்து கோல் பக்கம் செல்லவே இல்லை.

இதனால் பிற்பாதியில் ஆட்டம் மேலும் தீவிரமானது. 73ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் எரிக் டையர் ‘பிரிகிக்’வாய்ப்பில் கோல் போட்டுக் கலக்கினார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியது. பரபரப்பான சூழலில், கடைசி நிமிடத்தில் ரஷிய வீரர் வாசிலி பெரேசுட்ஸ்கி தலையால் முட்டி கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில்  முடிந்தது. மற்றுமொரு ஆட்டத்தில் வேல்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வென்றது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் நடப்பு சம்பியன் ஸ்பெயின்-செக்குடியரசு (மாலை 6.30 மணி), அயர்லாந்து-சுவீடன் (இரவு 9.30 மணி), பெல்ஜியம்-இத்தாலி (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்