மூன்று வருடங்களின் பின்னர் ஆரம்பமாகும் சம்பியன்ஸ் லீக்

Champions League 2022

377

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய கால்பந்து தொடரான சம்பியன்ஸ் லீக் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்தள்ளது.  

இலங்கையின் பிரதான கால்பந்து தொடராக சம்பியன்ஸ் லீக் தொடர் நீண்ட காலமாக இருந்தது. எனினும், கடந்த வருடம் சுபர் லீக் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, தற்போது இலங்கையின் இரண்டாவது பிரதான தொடராக சம்பியன்ஸ் லீக் உள்ளது.

எனவே, பல மாற்றங்களுடன் இடம்பெறவுள்ள இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று (19) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்படி, 14 அணிகளின் பங்கேற்புடன் இம்முறை இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை இடம்பெறவுள்ளது. இம்முறை தொடரில் அனைத்து அணிகளும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்படி அனைத்து அணிகளும் தலா 13 போட்டிகளில் விளையாட வேண்டும். எனவே, தொடரில் மொத்தமாக 91 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை பங்கேற்கும் அணிகள்

கிறிஸ்டல் பெலஸ் கா.க, ஜாவா லேன் வி.க, மாத்தறை சிட்டி கழகம், மொறகஸ்முல்ல வி.க, நிகம்பு யூத் வி.க, நியூ ஸ்டார் வி.க, பெலிகன்ஸ் வி.க, சோண்டர்ஸ் வி.க, செரண்டிப் கா.க, பொலிஸ் வி.க, இலங்கை போக்குவரத்து சபை வி.க, சென். மேரிஸ் வி.க, சொலிட் வி.க, சுபர் சன் வி.க

போட்டிகள் அனைத்தும் கொழும்பு சுகததாஸ அரங்கு, குருனாகலை மாலிகாபிடிய அரங்கு, கண்டி போகம்பரை விளையாட்டரங்கு என்பவற்றுடன் காலி மாவட்ட விளையாட்டரங்கு அல்லது மாத்தறை மைதானம் என்பவற்றில் ஒன்று என மொத்தமாக நான்கு மைதானங்களில் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லீக் போட்டிகளின் நிறைவில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெறும் அணி சம்பியனாகத் தெரிவாகும். இம்முறை சம்பியனாகத் தெரிவாகும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணப் பரிசுடன் சம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் பணப் பரிசாக வழங்கப்படும்.

இம்முறை தொடரிலும் 3 வெளிநாட்டு வீரர்களை ஒரு அணிக்கு பதிவு செய்து விளையாட முடியும். அதேபோன்று, 21 வயதின்கீழ் வீரர்கள் 3 பேர் ஒவ்வொரு அணியிலும் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் குறைந்தது ஒருவர் கட்டாயம் போட்டியின் முழு நேரமும் விளையாட வேண்டும்.

அதேபோன்று, இம்முறை அனைத்து அணிகளுக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் தலா 25 இலட்சம் ரூபாய் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<