மொகன் பகானிடம் வீழ்ந்தது புளூ ஸ்டார்

AFC Cup 2022

190
ATK Mohun Bagan FC v Blue Star SC
Image Courtesy - ATK Mohun Bagan FC Facebook

ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ணத்திற்கான பூர்வாங்க தகுதிகாண் இரண்டாம் சுற்றில் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் இந்தியாவின் ATK மோகன் பகான் கால்பந்து கழகத்திடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் இடம்பெற்ற பூர்வாங்க தகுதிகாண் முதல் போட்டியில் நேபாளத்தின் Machhindra கால்பந்து கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட புளூ ஸ்டார் வீரர்கள், செவ்வாய்க்கிழமை (12) கொல்கத்தாவில் உள்ள சோல்ட் லேக் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் மோகன் பகானை சந்தித்தது.

போட்டியின் ஆரம்பம் முதலே சொந்த மைதான அணியான மோகன் பகான் வீரர்கள் பந்தை தம்மிடம் வைத்து பரிமாற்றம் செய்து ஆதிக்கம் செலுத்தினர்.

அதன் பலனாக, அவ்வணியின் முன்கள வீரர்கள் 22ஆவது நிமிடத்தில் இலங்கை கோல் எல்லையில் வைத்து மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் Joni Kauko போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த 6 நிமிடங்களில் இந்திய தேசிய அணி வீரரான மன்விர் சிங், மோகன் பகான் அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார்.

மீண்டும், 40 நிமிடங்களை அண்மித்த நிலையில் மோகன் பகான் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை புளூ ஸ்டார் கோல் காப்பாளர் கவீஷ் அங்கிருந்து வெளியேற்ற, பெனால்டி எல்லையில் வைத்து புளூ ஸ்டார் தடுப்பு வீரரின் கையில் பந்து பட்டது. இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை Joni Kauko கோலாக்கினார்.

எனவே, முதல் பாதி நிறைவில் மூன்று கோல்களால் மோகன் பகான் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

மீண்டும் இரண்டாவது பதி ஆரம்பமாகி 35 நிமிடங்களுக்கும் மேலாக எந்தவொரு கோலும் பெறப்படவில்லை. எனினும், 77ஆவது நிமிடத்தில் டேவிட் வில்லியம்ஸ் போட்டியின் நான்காவது கொலைப் பதிவு செய்தார்.

மன்விர் சிங், ஆட்டத்தின் 88ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்ய, போட்டி நிறைவில் மோகன் பகான் அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாக, புளூ ஸ்டார் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

முழு நேரம்: ATK மோகன் பகான் கா.க 5 – 0 புளூ ஸ்டார் வி.க

கோல் பெற்றவர்கள்

  • ATK மோகன் பகான் கா.க – Joni Kauko 22’ & 39’(P), மன்விர் சிங் 28’ & 88’, டேவிட் வில்லியம்ஸ் 77’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<