இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொள்கின்றார் அமிர் அலர்ஜிக்

221

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும் தற்போதைய இலங்கை கால்பந்தின் தொழில்நுட்ப இயக்குனருமான (Technical Director) அமீர் அலர்ஜிக், எதிர்வரும் ஜூன் மாதத்துடன் இலங்கை கால்பந்தில் தனது சேவையினை நிறைவு செய்துகொள்ளவுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்ற அமீர் அலர்ஜிக், இலங்கை அணியின் முன்னேற்றத்திற்காக தனது ஐரோப்பிய அனுவத்தினை சிறந்த முறையில் வழங்கியிருந்தார்.

இவரது பயிற்றுவிப்பின்கீழ் இலங்கை அணி  தென் கொரியாவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று, மாலைதீவுகளில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ணம் மற்றும் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாடுகள் பங்கேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடர் ஆகிய போட்டித் தொடர்களில் பங்கேற்றிருந்தது.

இதில், மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடரில் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணி, சுமார் 18 வருடங்களின் பின்னர் கால்பந்து தொடர் ஒன்றில் பதக்கம் ஒன்றை வென்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களாக தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அமிர் அலர்ஜிக், இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை கால்பந்தின் தொழில்நுட்ப இயக்குனராகவும் நியமனம் பெற்றார்.

தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் சம்பளம் வழங்குவதில் சிரமங்கள் நிலவுகின்றன. இவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் இடையே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் நிறைவில், அமிர் அலர்ஜிக்கின் சேவையை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர் என இலங்கை கால்பந்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

அதேபோன்று, இந்த முடிவானது இலங்கை கால்பந்திற்கும், பயிற்றுவிப்பாளர் அமிர் அலர்ஜிக்கின் எதிர்காலத்திற்கும் சிறந்த ஒரு தீர்மானமாக அமையும் என்றும் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தில் சிறந்த ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் இலங்கை அணியின் திறமையை மெருகூட்டிய அமிர் அலர்ஜிக் அவர்களுக்கு இலங்கை கால்பந்தின் சார்பாக தான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்” என ஜஸ்வர் உமர் மேலும் குறிப்பிட்டார்.

தனது சேவையின் நிறைவு குறித்து கருத்து தெரிவித்த தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலர்ஜிக், ”நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கின்றேன். நான் மீண்டும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளேன், மரியாதையை பெற்றுள்ளேன், கிராமப்புறங்களுக்கு கால்பந்தை கொண்டு சென்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த தலைவர் ஜஸ்வர் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். எனக்கு தலைவர் ஜஸ்வர் தூணாக இருந்தார். நாம் தொடங்கியதை தொடர வேண்டும். நான் போகலாம் ஆனால் என் இதயம் இங்கேயே இருக்கும்” என்றார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<