கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) ஸ்டீவ் ஸ்மித்

172
Photo courtesy - AFP

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ஒருவருட தடைக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள் தலைரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித் இவ்வருடம் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>> ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் மனம் திறக்கும் கிளேன் மெக்ஸ்வெல்

உலகளாவிய ரீதியில் உள்ள முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன், கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் ஐ.பி.எல், அவுஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக், பாகிஸ்தானின் பி.எஸ்.எல், இங்கிலாந்தின் T-20 பிளாஸ்ட்  மற்றும் பங்களாதேஷின் பி.பி.எல். தொடர்களை போன்று, கரீபியன் பிரீமியர் லீக் தொடரும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்குறிய T-20 தொடராகும். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முடக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் முதன் முறையாக கரீபியன் பிரீமியர் லீக்கில் களமிறங்குவது, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ரசிகர்களுக்கு மாத்திரமின்றி, உலகளாவிய ரீதியில் உள்ள கிரிக்கெட் ரசகிர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கிய ஸ்டீவ் ஸ்மித், இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது, பந்தின் தன்மையை மாற்றியமைத்த  குற்றச்சாட்டுக்காக அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒருவருட தடைக்கு ஆளாகியிருக்கிறார். அத்துடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைமை பொறுப்பையும் ஏற்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

>> ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிக்பேஷ் லீக் என்பவற்றில் விளையாட அவுஸ்திரேலிய கிரி்ககெட் சபை, ஸ்டீவ் ஸ்மித்துக்கு தடை விதித்திருந்தாலும், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டித் தொடர்களில் பங்கேற்க வாய்ப்பு வழங்கியது. எனினும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தடைவிதித்த காரணத்தால், இந்தியாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

இந்தக் காரணங்களினால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் ஓய்வுகொடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர், கனடாவில் முதன்முறையாக நடைபெற்ற குளோபல் T-20 தொடரில் மீண்டும் களமிறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்மித் டொரண்டோ நெசனல் அணிக்காக விளையாடி, இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக தொடரில் 167 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்தநிலையில், தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்காக அழைக்கப்பட்டுள்ளார். சகிப் அல் ஹசனுக்கு தொடரின் இறுதிவரை அணியுடன் பயணிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், அவருக்குப் பதிலாக ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் ரொபின் சிங் கருத்து தெரிவிக்கையில்,

முதலில் அணியிலிருந்து சகிப் அல் ஹசன் வெளியேறியமையானது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். எனினும் அதற்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் அணிக்கு கிடைத்துள்ளமை மிக மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் வருகை அதீத பலத்தை சேர்க்கும். ஸ்டீவ் ஸ்மித், உயர்தரமான கிரிக்கெட் திறமையை உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளிக்காட்டியுள்ளார். இதனால் ட்ரைடன்ஸ் அணியின் எதிர்கால வெற்றிக்கு ஸ்டீவ் ஸ்மித் முக்கிய காரணமாக இருப்பார்என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்பதை தொடர்ந்தும் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், கடந்த மார்ச் மாதம் இறுதியாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த போதும், இதுவரையில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்காக 64 டெஸ்ட், 108 ஒருநாள் மற்றும் 30 T-20  போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<