மாலைதீவின் ‘Sports Icon’ விருதை வென்ற சனத், தர்ஜினி

184

2022 மாலைதீவு விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ (Sports Icon) விருது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய மற்றும் இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் ஆகிய இருவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நேற்று (17) இரவு எகுவேனி ஓடு தளத்தில் இடம்பெற்றது.

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்ஹின் தலைமையில் இடம்பெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் உலகளாவிய ரீதியில் இருந்து பல நட்சத்திர வீரர்கள் மற்றும் வெளிநாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருது (Sports Icon) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டது. விளையாட்டின் மூலம் நேர்மறையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக சனத் ஜயசூரியவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அதேபோன்று, இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கமும் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதுக்கு சனத் ஜயசூரியவுடன் உலகின் முன்னணி கால்பந்து கழகங்களில் ஒன்றான ரியல் மெட்ரிட் வீரர் ரொபர்டோ கார்லோஸ், ஜமைக்காவின் நட்சத்திர குறுந்தூர வீரர் அசாபா பவல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் நெதர்லாந்து கால்பந்து ஜாம்பவான் எட்கர் டாவிட்ஸ் உட்பட 16 சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இந்த விருது வழங்கும் விழாவில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு விசேட அங்கீகார விருது வழங்கப்பட்டது.

பங்களாதேஷின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.டி சாஹிர் அஹ்சன் ரஸ்ஸல் உடன் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<