தென் கொரியாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி நேற்று (24) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தென் கொரியாவின் குமி நகரில் நடைபெறவுள்ள நிலையில், இதில் இலங்கையைச் சேர்;ந்த 20 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.
ஈட்டி எறிதலில் தேசிய சம்பியனான சுமேத ரணசிங்க ஆண்கள் தலைவராகவும், ஈட்டி எறிதலில் ஆசிய பதக்கம் வென்ற நதீஷா டில்ஹானி லேக்கம்கே பெண்கள் அணியின் தலைவியாகவும் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் செயல்படுகிறார்கள்.
அதேபோல, ஒலிம்பிக் வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான இலங்கையின் நட்சத்திர குறுந்தூர வீரர் யுபுன் அபேகோன் முதல் முறையாக ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆசிய சம்பியனும், தற்போது அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற இலங்கையின் நட்சத்திர மத்திய தூர ஓட்ட வீராங்கனையுமான தருஷி கருணாரட்ன இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த மே 9ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற துபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில பங்கேற்ற 4×100 மீற்றர் இலங்கை அஞ்சலோட்ட அணி பின்னடைவை சந்தித்த நிலையில், இம்முறை ஆசிய சம்பியன்ஷிப் சுற்றுப்பயணத்திலிருந்து அந்த அணியை நீக்குவதற்கு தேசிய மெய்வல்லுனர் தேர்வுக் குழு முடிவு செய்தது.
எவ்வாறாயினும், தேசிய விளையாட்டு அணிகளின் தேர்வு தொடர்பான இறுதிப் பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் கொண்ட தேசிய விளையாட்டு தேர்வுக் குழு, ஏற்கனவே திட்டமிட்டபடி இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 4×100 மீற்றர் (ஆண்கள்) இலங்கை அஞ்சலோட்ட அணியை பங்கேற்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
- ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான இலங்கை அணியில் யுபுன்
- தேசிய விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு கரம் கொடுக்கும் MAS நிறுவனம்
- டுபாய் கிராண்ட் பிரிக்ஸில் முதலிடம் பிடித்த சமோத்; யுபுனுக்கு பின்னடைவு
இதன்படி, இத்தாலியில் வசிக்கும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் உட்பட சமோட் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க, தெனெத் வீரரட்ன, சமோட் திசாநாயக்க ஆகியோர் இலங்கை 4×100 மீற்றர் அஞ்சலோட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.
இதேவேளை, இம்முறை இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் முகாமையாளராக ஐராங்கனி ரூபசிங்க செயல்படுகிறார். அணியின் பயிற்சியாளர்களாக ஐ.எம்.ரணசிங்க, டோனி ப்ரசன்ன, லால் விஜேவிக்ரம மற்றும் யுபுன் அபேகோனின் தனிப்பட்ட பயிற்சியாளர் இத்தாலிய நாட்டவரான கிளோடியோ லிசியாடெலோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, இலங்கை அணிக்கு இரண்டு இயன்முறை சிகிச்சையாளர்களின் (physiotherapists) சேவையும் கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் யுபுன் அபேகோனுக்கு சேவை வழங்குவதற்காக இத்தாலியிலிருந்து அழைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த ஆண்டு ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்கள் குறைந்தபட்சம் எட்டு பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் செயலாளர் சமன் குமார குணவர்தன தெரிவித்தார்.
இறுதியாக கடந்த 2023ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை மூன்று தங்கப் பதக்கங்கள் உட்பட எட்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதில் நதீஷா ராமநாயக்க (பெண்களுக்கான 400 மீற்றர்), தருஷி கருணாரட்;ன (பெண்களுக்கான 800 மீற்றர்) மற்றும் 4×400 மீற்றர் ஆண்கள் அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கங்களையும் வெனறது.
52 ஆண்டுகால ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை அணி இதுவரை 22 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நாடு வென்ற இரண்டாவது அதிகபட்ச தங்கப் பதக்கங்கள் இதுவாகும்.
இதுவரை நடைபெற்றுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தப் போட்டியில் சீனா 325 தங்கப் பதக்கங்களை வென்று அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியா 94 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள்அணிவிபரம்–
யூபுன் அபேகோன் (100 மீ, 200 மீ மற்றும் 4×100 மீ), சமோத் யோதசிங்க (100 மீ மற்றும் 4×400 மீ), மெரோன் விஜேசிங்க (4×400 மீ அஞ்சலோட்டம்), தெனெத் வீரரட்ன (4×100 மீ அஞ்சலோட்டம்), சமோத் திசாநாயக்க (4×100 மீ அஞ்சலோட்டம்), காலிங்க குமாரகே (4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), அருண தர்ஷன (4×400 மீ – அஞ்சலோட்டம் மற்றும் 4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), சதேவ் ராஜகருணா (4×400 மீ அஞ்சலோட்டம்), ஒமெல் ஷஷிந்த (4×400 மீ அஞ்சலோட்டம்), கல்ஹார இந்துப (4×400 மீ அஞ்சலோட்டம்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), ருமேஷ் தரங்க (ஈட்டி எறிதல்), லெசேது அதாவிது (உயரம் பாய்தல்)
பெண்கள் அணி விபரம்–
நதீஷா ராமநாயக்க (400 மீ – 4 ×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), சயூரி லக்ஷிமா மெண்டிஸ் (4×400 மீ – கலப்பு அஞ்சலோட்டம்), நிஷேந்திரா பெர்னாண்டோ (4×400 மீ அஞ்சலோட்டம்), ஜெயேஷி உத்தரா (4×400 மீ அஞ்சலோட்டம்), ஜித்மா விஜேதுங்க (4×400 மீ அஞ்சலோட்டம்), தில்ஹானி லேகம்கே (ஈட்டி எறிதல்), ரசாரா விஜேசூரிய (5000 மீற்றர், 10000 மீற்றர்)
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<