ஜீவன் மெண்டிஸின் கனவு நனவான உலகக் கிண்ணம்

629

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய, இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ், உலகக் கிண்ணம் தனது ‘கனவு நனவாகும்’ மையப்புள்ளி என்று வர்ணித்துள்ளார்.

36 வயதான மெண்டிஸ் கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தோன்றினார். இலங்கை அணியில் இணையும் எதிர்பார்ப்புடன் கொழும்பில் பல மாதங்கள் கடுமையாக பயிற்சி பெற்றார்.

தனது பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவாக இருக்கும் திமுத் கருணாரத்ன

முதல் 10 ஓவர்களுக்குள் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெறுவதும், வீரர்களை…

தென்னாபிரிக்காவில் அபார திறமையை வெளிப்படுத்திய அவர், 1996ஆம் ஆண்டு போன்று மீண்டும் வெற்றியாளராவதற்கும் இங்கிலாந்து சூழலில் தனது அனுபவத்தை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ளார்.

“ஒரு கிரிக்கெட் தொடரும் இல்லாத நேரத்தில் எனது கழகமான தமிழ் யூனியனில் எனது உடற்தகுதிக்காக உழைத்தேன்” என்று மெண்டிஸ் குறிப்பிட்டார். அவர் 2017 இல் டார்பிஷெர் கௌண்டிக்காக அந்தப் பருவத்தில் ஆடினார்.

“உலகக் கிண்ணத்தில் ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம் என்று நான் எதிர்பார்த்தேன். அந்தக் கனவு நனவானது. இங்கிலாந்தில் விளையாடுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப மாறுவது மற்றும் தொடர்ந்தும் எவ்வாறு பந்தைச் சுழலச் செய்வது என்பது பற்றி நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

சுழற்பந்து வீச்சாளராக தாக்கம் செலுத்துவது இங்கு இலகுவானதல்ல. எனவே, நான் எனது அனுபவத்தை வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எம்மால் சிறப்பாக செயற்பட முடியும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

மெண்டிஸுடன் மற்றொரு எதிர்பாராத சுழற்பந்து சகாவாக ஜெப்ரி வன்டர்சே இடம்பிடித்துள்ளார். அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லசித் மாலிங்கவின் அனுபவத்தில் இருந்து வெற்றிக்காக இலங்கை குழாம் அதிகம் கற்க வேண்டியுள்ளது.

தோல்வி அடைந்த பயிற்சிப் போட்டியில் கருணாரத்னவின் 87 மற்றும் மெதிவ்ஸின் 54 ஓட்டங்கள் இலங்கையின் மூத்த வீரர்கள் இந்த சவாலில் முன்னிலையில் நிற்பதை காட்டுவதாக உள்ளது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஸ்திரமான நிலையை எட்டுவதற்கு நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளும் தீர்க்கமாக இருப்பதாக இலங்கை அணிக்காக 54 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

“குழாம் ஒன்றிணைவாக இயங்குவது சற்றுக் கடினமானது” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஆனால், ஒரு மாதம் ஒன்றாக பயிற்சி பெற்று விட்டே ஓர் அணியாக இங்கு வந்திருக்கிறோம். அனுபவத்துடன் ஓர் இளம் அணியாக நாம் இருக்கிறோம்.

இங்கிலாந்து சூழலுக்கு நாம் இன்னும் பழக்கப்பட்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஏற்கனவே ஸ்கொட்லாந்தில் நாம் ஆடினோம். அங்கு அதிகம் குளிர்ச்சியாக இருந்தது!

உலகக் கிண்ணத்தின் முதல் இரு போட்டிகளும் தீர்க்கமானதாக அமையும். அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் இலங்கைக்கு நல்ல தொடராக அமைய வாய்ப்பு உள்ளது” என்றும் ஜீவன் மெண்டிஸ் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<