பார்சிலோனா அணி முக்கிய போட்டியில் தோல்வி

ஸ்பெயின் லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா அணி வலன்சியா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது. 

இதன் மூலம் பார்சிலோனாவின் புதிய முகாமையாளர் குயின் ஸ்டெயின் தனது முதல் தோல்வியை சந்தித்ததோடு வலன்சியா தனது சொந்த மைதானமான மஸ்டெல்லா அரங்கில் பார்சிலோனா அணியை 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை தோற்கடித்துள்ளது. 

வலன்சியா தனது அணித்தலைவர் டானி பரஜோ இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நேற்று (25) நடைபெற்ற போட்டியில் களமிறங்கியதோடு, பார்சிலோனா லுவிஸ் சுவாரெஸ் மற்றும் ஒஸ்மான் டெம்பெலே இன்றியே ஆடியது.  

முதல் பாதி ஆட்டத்தில் பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியதோடு 70 வீதமான நேரம் பந்து அந்த அணியின் கால்களிலேயே சுற்றியது. எனினும் அந்த அணியால் கோல் பெறும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. 

மறுபுறம் போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் வைத்து ஜோஸ் லுவிஸ் கயா பார்சிலோனா பெனல்டி பெட்டிக்குள் பந்தை கடத்தி வந்த நிலையில் கெரார் பெக்குவினால் கீழே வீழ்த்தப்பட வலன்சியாவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. எனினும் மக்சி கோமஸ் உதைத்த பந்து பார்சிலோனா கோல் காப்பாளர் மார்க் அக்ட்ரே டெர்ரினால் தடுக்கப்பட்டது.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 0 வலன்சியா

எனினும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே பார்சிலோனா கோல் எல்லையை முற்றுகையிட்ட வலன்சியா அந்த சந்தர்ப்பத்தைக் கொண்டு கோல் புகுத்தியது. மக்சி கோமஸ் மின்னல் வேகத்தில் உதைத்த பந்து மார்க் அக்ட்ரே டெர் ஸ்டெஜனுக்கு பிடிக்க முடியாமல் வலைக்குள் சென்றது.  

பதில் கோல் திருப்புவதற்கு லியோனல் மெஸ்ஸி பல சந்தர்ப்பங்களில் நெருங்கி வந்தபோதும் பார்சிலோனாவுக்கு எந்த அதிர்ஷ்டமும் கிட்டவில்லை.   

இந்நிலையில் மீண்டும் செயற்பட்ட மெக்சி கோமஸ், பெர்ரன் டொர்ரஸ் வழங்கிய பந்தை கீழ் வலது மூலையின் ஊடாக கோல் திருப்பி வலன்சியாவின் வெற்றியை உறுதி செய்தார். 

பார்சிலோனாவின் புதிய பயிற்சியாளராக நிமியமிக்கப்பட்ட ரியல் பெட்டிஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான குயின் ஸ்டெயின் கிரனடாவுக்கு எதிராக சொந்த மைதானத்தில் 1-0 என்ற வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பணியை ஆரம்பித்ததோடு வார நடுப்பகுதியில் இபிசா அணிக்கு எதிரான போட்டியை 2-1 என வென்றார். 

எனினும் வலன்சியாவிடம் பெற்ற தோல்வியால் பார்சிலோனா முதலிடத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. ரியல் மெட்ரிட் அணி இன்று வலடொலிட் அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு அந்தப் போட்டியில் ரியல் மெட்ரிட் வென்றால் பார்சிலோனா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும். 

முழு நேரம்: பார்சிலோனா 0 – 2 வலன்சியா

கோல் பெற்றவர்

  • வலன்சியா – மக்சி கோமஸ் 48’ & 77’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<