ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடாத்த திட்டமா?

338

இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினை இலங்கையில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் (ACC) உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பினை அடுத்து 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தினை நடாத்தும் நாடு தொடர்பில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ்

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் கிரிக்பஸ் செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் “குறுகிய கால அவகாசத்திற்குள் நாம் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். இனி இதற்கான தீர்மானம் ஆசிய கிரிக்கெட் வாரியத்திடமே இருக்கின்றது.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தன்னகத்தே கொண்டிருக்கின்றது. எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் என இரு நாடுகளில் நடாத்தும் பொறிமுறை ஒன்று (Hybrid Model) தொடர்பில்  அறிவித்திருந்தது.

இந்த திட்டத்திற்கு தொடரில் பங்கெடுக்கும் நாடுகளின் கிரிக்கெட் சபைகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் நாடு தொடர்பில் சந்தேகம் நிலவி வருகின்றது.

எனவே, இதற்கு மாற்றுத் தீர்வாக இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் நடாத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. இதற்கு இலங்கை கிரிக்கெட் சபையும் இணக்கம் தெரிவித்திருப்பதனையே கிரிக்பஸ் செய்தி இணையதளம் உறுதி செய்திருக்கின்றது.

இங்கிலாந்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ஜேசன் ரோய்

இலங்கையில் ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) ஆதரவும் இலங்கைக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் சபைக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB), ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) என்பவற்றின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. இது ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் நான்கு நாடுகள் இலங்கையில் ஆசியக் கிண்ணம் நடைபெற ஆதரவு வழங்கியிருப்பதனை உறுதிப்படுத்திக் காட்டுகின்றது.

மறுமுனையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஆசியக் கிண்ணம் தொடர்பில் தமக்கு சாதகமான ஒரு முடிவினை எதிர்பார்த்திருக்க, ஆசியக் கிண்ணம் எந்த இடத்தில் நடைபெறும் என்பது தொடர்ச்சியான ஒரு கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்க ஐ.சி.சி. இன் தலைமை அதிகாரியான கிரேக் பார்க்லேய் தற்போது இரண்டு நாள் விஜயத்துடன் பாகிஸ்தான் சென்றிருப்பதோடு அவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணையினை தயாரிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<