உடற்தகுதிப் பரிசோதனையில் மெண்டிஸ், குணத்திலக்க, பானுக்க தேர்ச்சி

280

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியினைப் பரிசோதிக்கும் முகமாக கடந்த வாரம் நடைபெற்ற தகுதிகாண் சோதனையில் தேர்ச்சி பெறத்தவறிய வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் தற்போது புதிய சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்கிந்திய சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்: SLC நம்பிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியினை நிரூபிக்கும் விதமாக நடைபெறுகின்ற சோதனையில் 2 கிலோ மீற்றர் தூரத்தினை 8 நிமிடங்கள் மற்றும் 35 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து இந்த தகுதிகாண் சோதனையில் பங்கு கொண்ட 32 வீரர்களில் பெரும்பாலான இலங்கை வீரர்கள் தேர்ச்சியடைந்த போதும், டில்ருவான் பெரேரா, தனுஷ்க குணத்திலக்க, குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் தேர்ச்சியடைய தவறினர்.

இவ்வாறு தகுதிகாண் சோதனைகளில் தேர்ச்சியடைய தவறிய வீரர்களில் தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ ஆகியோரே மீண்டும் தகுதிகாண் சோதனையில் பங்கேற்று தமது உடற்தகுதியினை நிரூபித்திருக்கின்றனர். 

இலங்கை வீரர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய முரளிரதன்!

இந்த வீரர்களில் தனுஷ்க குணத்திலக்க, 2 கிலோமீற்றர் தூரத்தினை 8 நிமிடங்கள் 23 செக்கன்களில் நிறைவு செய்ய, பானுக்க ராஜபக்ஷ 2 கிலோ மீற்றரினை 8 நிமிடங்கள் மற்றும் 27 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். 

மறுமுனையில், தனது திருமணம் காரணமாக கடந்த வாரம் இடம்பெற்ற தகுதிகாண் சோதனையில் பங்கெடுக்காது போயிருந்த குசல் மெண்டிஸ் தற்போது புதிய தகுதிகாண் பரிசோதனையில் பங்கெடுத்து தேர்ச்சியடைந்திருக்கின்றார். 

குசல் மெண்டிஸ் 2 கிலோ மீற்றர் தூரத்தினை 8 நிமிடங்கள் மற்றும் 18 செக்கன்களில் நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இருதரப்பு தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தொடருக்கு குறிப்பிட்ட தகுதிகாண் சோதனையில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர் என குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<