பாகிஸ்தான் சுபர் லீக் ஏலத்தில் இரு இலங்கை வீரர்கள்

1465

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) ஆறாவது பருவகாலத்திற்கான பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் முன்னணி வெளிநாட்டு வீரர்களின் பட்டியலை இன்று (05) வெளியிட்டிருக்கின்றது. 

டெஸ்ட் தொடரினை முழுமையாக இழந்த இலங்கை அணி

அதன்படி, இந்த வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் 25 பேர் தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு இந்த வீரர்கள், ஏலத்தின் பிளாட்டினம் பிரிவுக்குள் (Platinum Catergory) உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 

ஆறாவது பருவகாலத்திற்கான பாகிஸ்தான் சுபர் லீக் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கின்ற இந்த தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையிலையே இந்த வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நட்சத்திர வெளிநாட்டு வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

தற்போது இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தமது குழாம்களில் ஏற்கனவே இருக்கும் வீரர்களை தக்கவைத்திருப்பதற்கும், நீக்குவதற்குமான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், வீரர்கள் ஏலத்திற்காக உள்வாங்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களில் இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த இசுரு உதான மற்றும் திசர பெரேரா ஆகியோர் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதில், பந்துவீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான கடந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்ததோடு, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், திசர பெரேரா லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக இருந்ததோடு, தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அவர் அசத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று!

பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் ஏனைய வெளிநாட்டு நட்சத்திர வீரர்களாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில், ட்வெய்ன் ப்ராவோ, ஈவன் லூவிஸ் ஆகியோரும் இங்கிலாந்து அணியின் டாவிட் மலான், மொயின் அலி மற்றும் டொம் பென்டன் ஆகியோரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர தென்னாபிரிக்க அணியின் டேவிட் மில்லர், டேல் ஸ்டெய்ன், ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீட் கான், அவுஸ்திரேலிய அணியின் கிறிஸ் லின் ஆகியோரும் பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கவிருக்கின்றனர். இதில், ரஷீட் கான் ஐ.சி.சி. இன் கடந்த தசாப்தத்திற்கான சிறந்த T20 வீரர் விருதினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் கடந்த பருவகாலத்தினைப் போன்று இம்முறையும் பாகிஸ்தான் மண்ணிலேயே நடாத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இந்த தொடர் சிறந்த ஒரு தொடராக இருக்கும் என பாகிஸ்தான் சுபர் லீக் தொடரின் வர்த்தக முகாமையாளர் பாபர் ஹாமிட் குறிப்பிட்டிருக்கின்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<