தனுஷ்க குணத்திலக்கவின் அதிரடி சதத்துடன் இலங்கை A அணிக்கு அபார வெற்றி

4185

சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை A அணிக்கும் இன்று நடைபெற்று முடிந்துள்ள, இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டியில், பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டிருந்த இலங்கை A அணி டக்வத்-லூயிஸ் முறையில் 119 ஓட்டங்களால் இங்கிலாந்து லயன்ஸ் அணியினை வீழ்த்தியுள்ளது.

அத்துடன்,  இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என இலங்கை A அணி முன்னிலை வகிக்கின்றது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியினை தனதாக்கி கொண்ட விருந்தினர் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதனடிப்படையில் கடந்த போட்டியைவிட தமது குழாமில் சில வீரர்கள் பிரதியீட்டுடன், பென்  டக்கெட் மற்றும் அணித்தலைவர் கீட்டன் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் மைதானம் நுழைந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, தமது முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 18 ஓட்டங்களிற்குள் பறிகொடுத்தது.

விக்கெட் இழப்பினை சந்தித்த கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் டேனியல் பெல் டிரம்மொன்ட் ஆகியோரை முறையே இலங்கை A அணியின் விக்கும் சஞ்சய மற்றும் லஹிரு மதுசங்க வீழ்த்த, இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கை A அணியினை சாதுர்யமாக கையாள வேண்டியதை உணர்ந்தது.

இதனால், களத்தில் நின்ற பென் டக்கெட் மற்றும் லியாம் லிவிங்ஸ்ட்டன் ஆகியோர் பொறுப்பாக ஆடி, மூன்றாம் விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை சேர்த்தனர். மூன்றாவது விக்கெட்டாக ஆட்டம் இழந்த டக்கெட் அரைச்சதம் கடந்ததோடு, 45 பந்துகளிற்கு 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி 59 ஓட்டங்களினைப் பெற்றார். இவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை A அணியின் மேம்படுத்தப்பட்ட பந்து வீச்சினை எதிர்கொள்ள தடுமாறினர். பின் வந்த வீரர்களில் ஜோ கிளார்க் ஓரளவு நல்ல ஆட்டத்தினை தந்ததோடு மறுமுனையில் தனியொருவராக நின்று போராடிய லியாம் லிவிங்ஸ்ட்டன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்த பெரும் பங்காற்றி இருந்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் ஓரிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி, 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.

இதில், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் லியாம் லிவிங்ஸ்ட்டன் மொத்தமாக 104 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 94 ஓட்டங்களினைப் பெற்று சதம் தவறவிட்டார்.

இலங்கை A அணி சார்பான பந்து வீச்சில், அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தன 40 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, திசர பெரேரா மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் பங்கிட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, 219 ஓட்டங்களினைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோருடன் ஆடுகளம் நுழைந்த இலங்கை A அணி, விக்கெட் இழப்பின்றி 28.4 ஓவர்களில் அபாரமாக 201 ஓட்டங்களினைப் பெற்றிருந்த வேளையில், சீரான வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், தொடர்ந்தும் இதே நிலை நீடித்ததால், வெற்றிக்கு டக்வத் லூயிஸ் முறையில் 28.4 ஓவர்களிற்கு 83 ஓட்டங்களினையே பெற்றிருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட இலங்கை A அணி போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து லயன்ஸ் அணிப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்த, தனுஷ்க குணத்திலக்க வாண வேடிக்கைகளை காட்டி வெறும் 88 பந்துகளிற்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உள்ளடங்களாக 122 ஓட்டங்களினை விளாசி ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். இது அவரிற்கு 4ஆவது A வகைப்போட்டி சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மறுமுனையில் ஆட்டமிழக்காத குசல் பெரேரா அரைச்சதம் எட்டியதோடு 84 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 70 ஓட்டங்களினைப் பெற்று, இந்த தொடரில், தனது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தினார்.

தொடரில் இரு அணிகளும் மோதிக்கொள்ளும், மூன்றாவது போட்டி எதிர்வரும் திங்கள் (6) குருநாகல் வெலகதர மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி – 217 (42.5) லியாம் லிவிங்ஸ்ட்டன் 94(104), பென் டக்கெட்  59(45), ஜோ கிளார்க் 26(42), மிலிந்த சிறிவர்த்தன 40/4(7.5), திசர பெரேரா 17/2(6), லஹிரு மதுசங்க 34/2(6)

இலங்கை A அணி – 201/0 (28.4)தனுஷ்க குணத்திலக்க 121*(88), குசல் பெரேரா 70*(84)

போட்டி முடிவுஇலங்கை A அணி 119 ஓட்டங்களால் வெற்றி (D/L முறையில்)