இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கட்டின் தாயகம் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். இது குறித்து மிஸ்பா கூறுகையில் ‘‘சூரியன் நன்றாக வெளியே வந்துள்ளது. ஆடுகளம் துடுப்பாட்டம் செய்வதற்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகையால் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தேன்” என்றார்.

இங்கிலாந்து அணித் தலைவர் எலைஸ்டர் குக் கூறுகையில் ‘‘ஆடுகளத்தைப் பார்த்ததில் சிறிது பச்சை புற்கள் காணப்படுகின்றன. இருந்தாலும் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதுபோல் உள்ளதால், நாங்கள் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும்” என்றார்.

அதன்படி தமது முதல் இனிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்களை சேர்த்திருந்தது. மிஸ்பா உல் ஹக் 110 ஓட்டங்களுடன்  களத்தில் இருந்தார்.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. மிஸ்பா உடன் விக்கெட் காப்பாளர்  சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். சர்பிராஸ் அஹமது விரைவாக 29 பந்துகளில் 25 ஓட்டங்களை  சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனை அடுத்து வந்த வஹாப் ரியாஸ் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். சதம் அடித்து நிலைத்து நின்று விளையாடிய மிஸ்பா இன்றைய ஆட்டத்தில் மேலும் நான்கு ஓட்டங்களை மட்டுமே எடுத்து 114 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஸ்டுவர்ட் ப்ரோட் வீசிய பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

பின் இறுதியாக கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முஹமத் ஆமிர்- யாசிர் ஷா ஜோடி 23  ஓட்டங்களைச் சேர்க்க, பாகிஸ்தான் முதல் இனிங்ஸில் 99.2 ஓவர்களில் 339 ஓட்டங்களைப் பெற்று தமது  சகல விக்கட்டுகளையும் இழந்தது.

கடைசி விக்கெட்டாக  முஹமத் ஆமிர் 12 ஓட்டங்களை  சேர்த்து ஆட்டம் இழந்தார்.. யாசீர் ஷா 11 ஓட்டங்களை  எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 2ஆவது நாளில் 12.2 ஓவர்கள் சந்தித்து 57 ஓட்டங்களை  எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்குத் துணையாக ஸ்டுவர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்கள்.

பின்னர் தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் விக்கட்டை இழந்தது. இலங்கை டெஸ்ட் தொடரில் பிரகாசித்த அலெக்ஸ் ஹேல்ஸ் 6 ஓட்டங்களோடு ஏமாற்றம் அளித்து வெளியேறினார். பின் தலைவர் எலஸ்டயர் குக்கோடு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் நிதானமாக ஆடி ஓட்டங்களைப் பெற்றனர். இந்த ஜோடி 2ஆவது விக்கட்டுக்காக 110 ஓட்டங்களைப் பகிர்ந்த பின் ஜோ ரூட் 48 ஓட்டங்களோடு  இழந்தார். அவரின் விக்கட்டை யசீர் ஷா கைப்பற்றினார்.

அதன் பிறகு தொடர்ந்து இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களைத் திணறடிக்க செய்யும் வகையில் பந்துவீசிய யசீர் ஷா சிறிய இடைவெளிகளில் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் கெரி பெளன்ஸின் விக்கட்டை வீழ்த்த மறுமுனையில் முஹமத் ஆமிர் குக்கின் விக்கட்டை வீழ்த்தினார். பிறகு மீண்டும்  யசீர் ஷா இன்னுமொரு விக்கட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அபாரமாக பந்துவீசிய யசீர் ஷா 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இது அவர் ஆசிய களங்களுக்கு வெளியே கைப்பற்றும் 1ஆவது 5 விக்கட் ஆகும். அத்தோடு லோர்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யசீர் ஷா தனது பெயரைப் பதித்தார்.

இவரின் விளையாடிக் கொள்ள முடியாத பந்துவீச்சை தடுமாறி எதிர்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி இறுதியில் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி 3 விக்கட்டுகள் கையில் இருக்க பாகிஸ்தானை விட 86 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் – 339/10 (99.2)

மிஸ்பா உல் ஹக் 114, அசாத் ஷபிக் 73, முஹமத் ஹபீஸ் 40, யூனிஸ் கான் 33, கிறிஸ் வோக்ஸ் 70/6, ஸ்டுவர்ட் ப்ரோட் 71/3, ஜெக் போல் 51/1

இங்கிலாந்து அணி 253/7

எலஸ்டயர் குக் 81, ஜோ ரூட் 48, கிறிஸ் வோக்ஸ் 31*, ஜொனி பேர்ஸ்டோவ் 29யசீர் ஷா 64/5, முஹமத் ஆமீர் 65/1, ரஹத் அலி 68/1

அத்தோடு இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட  வீரராகவும், தலைவராகவும் செயற்படுபம் 31 வயதான எலஸ்டயர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார். 2006ஆம் ஆண்டு  இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

சிறந்த துடுப்பாட்ட வீரரான இவர் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். 8900 ஓட்டங்களைக் கடக்கும் போது  டெஸ்டில் அதிக ஓட்டங்களை குவி்த்த கிரகாம் கூச் சாதனையை முறியடித்து அதிக ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின் குறைந்த வயதில் 10,000 ஓட்டங்களைக்  கடந்த வீரர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

10,122 ஓட்டங்களைத்  தாண்டும்போது கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார். தற்போது கவாஸ்கரின் மேலும் ஒரு சாதனையை முறியடித்துள்ளார். கவாஸ்கர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கி 119 போட்டிகளில் 9607 ஓட்டங்களைக் குவித்து சாதனைப் படைத்திருந்தார். இந்த சாதனையை, தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார் குக்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டி தொடங்கும்போது குக் 9549 ஓட்டங்களை  எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் 59 ஓட்டங்களை எடுத்திருக்கும் போது 9608 ஓட்டங்களை எடுத்து கவாஸ்கர் சாதனையை முறியடித்தார். இதுவரை 130 போட்டிகளில் விளையாடியுள்ள எலஸ்டயர் குக் 7 முறை தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக  களம் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்