தென்னாபிரிக்காவிற்கு எதிரான இலங்கை A குழாம் அறிவிப்பு

587
Sri Lanka ‘A’ squad announced

தென்னாபிரிக்க A கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும், இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடும் இலங்கை குழாம் இதுவா?

15 பேர் அடங்கிய இந்த இலங்கை A குழாத்தின் தலைவராக 22 வயது நிரம்பிய துடுப்பாட்டவீரர் நிபுன் தனன்ஞய நியமிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை A குழாத்தின் பெரும்பாலான வீரர்கள் அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை A அணியில் முக்கிய உள்ளடக்கமாக அஷேன் பண்டாரவினை குறிப்பிடலாம். அஷேன் பண்டார அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய சுபர் லீக் (NSL) தொடரில் 59.85 என்கிற துடுப்பாட்ட சராசரியில் 419 ஓட்டங்கள் குவித்ததோடு, தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்டவீரராகவும் மாறியிருந்தார்.

இதேவேளை இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சைனமன் சுழல்பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகனும் தேசிய சுபர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஆட்டத்தினை அடுத்து இலங்கை A அணியில் பெயரிடப்பட்டிருக்கின்றார்.

இலங்கை A அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவிஷ்க பெர்னாண்டோ நியமிக்கப்பட்டிருப்பதோடு, இந்த தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இறுதி இலங்கை குழாத்தினை தெரிவு செய்வதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> பலமிக்க குழாத்துடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அமெரிக்கா

இலங்கை A அணி மற்றும் தென்னாபிரிக்க A கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட தொடர் என்பன ஜூன் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A அணி

நிப்புன் தனன்ஞய (தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, நிஷான் மதுஷ்க, நுவனிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, சஹான் ஆராச்சிகே, லஹிரு உதார, துனித் வெல்லாலகே, ஜனித் லியனகே, மிலான் ரத்நாயக்க, பிரமோத் மதுசான், டில்சான் மதுசங்க, இஷித பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன், நிமேஷ் விமுக்தி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<