இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸி.!

171
ICC

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நீண்ட தொடரின் போட்டி அட்டவணையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இன்று (28) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் 112 நாட்களுக்கு பின்னர் கொவிட்-19 ஊரடங்கிலிருந்து மீண்டுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆஸி. தொடருக்கான இந்திய குழாமில் 4 தமிழ்நாட்டு வீரர்கள்

அதேநேரம், அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஏனைய மூன்று டெஸ்ட் போட்டிகளும் அடிலெய்ட், சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நடைபெறும் எனவும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர், நவம்பர் 12ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளது. அங்கு செல்லும் இந்திய அணி 14  நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுக்கும். 

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் வீரர்கள் அவர்களுடைய பயிற்சிகளை தொடருவதற்கு, நியூவ் சௌத் வேல்ஸ் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இந்திய வீரர்கள் எத்தனை வீரர்கள் கொண்ட குழுவாகவும் பயிற்சிகளை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய செல்லும் இந்திய அணி, சிட்னியை அடைந்து முதலில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. நவம்பர் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதலிரண்டு போட்டிகளும் சிட்னியில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது ஒருநாள் போட்டி கென்பராவில் நடைபெறவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 4ம் திகதி கென்பராவில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஆரம்பிக்கவுள்ளதுடன், அடுத்த இரண்டு T20I போட்டிகளும் சிட்னியில் நடைபெறவுள்ளன. 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களின் நிறைவின் பின்னர், இந்திய அணி ஒரு பகலிரவு டெஸ்ட் பயிற்சிப் போட்டி மற்றும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளைாடவுள்ளது. இறுதியாக, இந்திய அணி அடிலெய்ட் ஓவலில் பகலிரவு டெஸ்ட் போட்டியுடன், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவுள்ளதுடன், ஜனவரி 19ம் திகதி பிரிஸ்பேனில் தொடர் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

போட்டி அட்டவணை

போட்டி திகதி மைதானம்
முதல் ஒருநாள்  நவம்பர் 27 சிட்னி கிரிக்கெட் மைதானம்
2வது ஒருநாள் நவம்பர் 29 சிட்னி கிரிக்கெட் மைதானம்
3வது ஒருநாள் டிசம்பர் 2 மனுகா ஓவல் கென்பரா
முதல் T20I டிசம்பர் 4 மனுகா ஓவல் கென்பரா
2வது T20I டிசம்பர் 6 சிட்னி கிரிக்கெட் மைதானம்
3வது T20I டிசம்பர் 8 சிட்னி கிரிக்கெட் மைதானம்
பயிற்சிப் போட்டி டிசம்பர் 6-8 ட்ரொமைன் ஓவல் சிட்னி
பயிற்சிப் போட்டி டிசம்பர் 11-13 (D/N) சிட்னி கிரிக்கெட் மைதானம்
முதல் டெஸ்ட் டிசம்பர் 17-21 (D/N) அடிலெய்ட் ஓவல்
2வது டெஸ்ட் டிசம்பர் 26-30 மெல்பேர்ன் 
3வது டெஸ்ட் டிசம்பர் 7-11 சிட்னி கிரிக்கெட் மைதானம்
4வது டெஸ்ட் டிசம்பர் 15-19 தி கெப்பா, பிரிஸ்பேன் 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<