பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை

60th India Inter State Athletics Championship - 2021

215

இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்றுவருகின்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை படைத்தது.

இன்று (29)  மாலை நடைபெற்ற பெண்களுக்கான 4தர100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி களமிறங்கியது.

இதில் 44.55 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து இலங்கை பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் 19 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி பதிவுசெய்த அதிசிறந்த காலப்பெறுமதி இதுவாகும்.

இந்தியாவில் வெண்கலப் பதக்கம் வென்றார் லக்ஷிகா சுகன்தி

அதேபோல, பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி பதிவுசெய்த ஐந்தாவது அதிசிறந்த காலப்பெறுமதியாகவும் இது இடம்பிடித்தது.

அதுமாத்திரமின்றி, 2019 நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டத்தில் தங்கம் பதக்கம் வென்ற இலங்கை அணி பதிவுசெய்த 44.89 செக்கன்கள் காலப்பெறுமதியும் இந்தப் போட்டியின் மூலம் முறியடிக்கப்பட்டது.

இதேவேளை, 2018இல் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சென் ஆகியோருடன் பதின்ம வயது வீராங்கனை மெதானி ஜயமான்ன ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அஞ்ச்லோட்ட அணியில் இடம்பிடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பெண்களுக்கான 100 மீட்டரில் அமாஷாவுக்கு வெள்ளிப் பதக்கம்

எனவே, போதியளவு அனுபவம் இல்லாத காரணத்தால் கோல் மாற்றங்களின்போது இவர்கள் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.

எதுஎவ்வாறாயினும், குறித்த போட்டியில் டூட்டி சாந்த் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கத்தையும், தெலுங்கானா மாநில அணி வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

காலிங்கவுக்கு இரண்டாவது பதக்கம்

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 21.13 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கையின் காலிங்க குமாரகே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் நூழிலையில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்கை அவர் தவறவிட்டார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 400 மீட்டரில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே

இதனிடையே, போட்டியை 21.04 செக்கன்களில் நிறைவுசெய்த பஞ்சாப் மாநில வீரர் எஸ். பிரீத் தங்கப் பதக்கத்தையும், தமிழ் நாடு வீரர் பி. நிதின் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்

நிலானிக்கு வெண்கலப் பதக்கம்

ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலானி ரத்னாயக்க இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 10 நிமிடங்கள் 12.02 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நிலானி ரத்னாயக்க பெண்களுக்கான 3,000 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 56ஆவது இடத்தில் இருந்தார்

எனவே இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவருக்கு இன்னும் சில புள்ளிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை நிலானி ரத்னாயக்க பெற்றுக்கொண்டதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் இன்று காலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்து.

ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

இதனிடையே, இந்தப் போட்டியில் இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பருல் சாவு போட்டியை 10 நிமிடங்கள் 01.58 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

மகாராஷ்டிரா மாநில வீராங்கனையான கோமல் சான் (10 நிமி. 10.31 செக்.) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

19 வயது மெதானிக்கு வெள்ளிப் பதக்கம்

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டிக்கான தங்கப் பதக்கத்தை கடும் போட்டியின் பின்னர் இலங்கையின் கனிஷ் வீராங்கனையான மெதானி ஜயமான்ன தவறவிட்டார்.

அப் போட்டியை 24.08 செக்கன்களில் நிறைவுசெய்த மெதானி ஜயமான்னவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ் மெய்வல்லுனர் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் உறுதிசெய்தார்.

இதனிடையே, இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி போட்டியை 24.01 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்றெடுக்க, தெலுங்கானா மாநில வீராங்கனையான ஹரிகா தேவி (24.64 செக்.) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

சுமேதவுக்கு மூன்றாமிடம்

இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 77.28 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தனர்

இலங்கைக்கு 9 பதக்கங்கள்

60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் அழைப்பு போட்டியாளர்களாக பங்குகொண்ட இலங்கை அணி 9 பதக்கங்களை சுவீகரித்தது.

இதன்படி, ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணி ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கம் என எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டிகளைத் தவிர லக்ஷிகா சுகன்தி (வெண்கலம் – 100 மீ. சட்டவேலி ஓட்டம்), அமாஷா டி சில்வா (வெள்ளி – 100 மீட்டர்) நிமாலி லியனாஆராச்சி (வெண்கலம் – 800 மீட்டர்), காலிங்க குமாரகே (400 மீட்டர்) ஆகிய வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…