இந்தியாவில் 400 மீட்டரில் தங்கம் வென்றார் காலிங்க குமாரகே

60th India Inter State Athletics Championship - 2021

107

இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில்  இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய காலிங்க, போட்டியை 45.73 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவில் வெண்கலப் பதக்கம் வென்றார் லக்ஷிகா சுகன்தி

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், 400 மீட்டர் போட்டிகள் வரலாற்றில் இலங்கை வீரரொருவரினால் பதிவுசெய்யப்பட்ட நான்காவது அதிசிறந்த காலத்தையும் இதன்போது பதிவுசெய்தார். 

இதில் சுகத் திலகரட்ன (44.61 செக். – 1998), ரொஹான் பிரதீப் (45.25 செக். – 2000) பிரசன்ன அமரசேகர (45.27 செக். – 2005) ஆகியோர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அதிவேக காலத்தைப் பதிவுசெய்திருந்த இலங்கை வீரர்களாக இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே, இந்தப் போட்டியில் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த விக்ரன்த் 46.83 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.அத்துடன், டெல்லி வீரரான சர்தாக் (47.25 செக்.) வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை நதீஷா ராமநாயக்க, நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். குறித்த போட்டியை 54.37 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

பெண்களுக்கான 100 மீட்டரில் அமாஷாவுக்கு வெள்ளிப் பதக்கம்

இந்தப் போட்டித் தொடரில் இதுவரை இலங்கை அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் லக்ஷிகா சுகன்தி (வெண்கலம் – 100 மீ. சட்டவேலி ஓட்டம்), அமாஷா டி சில்வா (வெள்ளி – 100 மீட்டர்) நிமாலி லியனாஆராச்சி (வெண்கலம் – 800 மீட்டர்) ஆகியோரைத் தொடர்ந்து காலிங்கவுக்கு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதனிடையே, 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் தொடரின் கடைசி நாளான நாளைய தினம் முக்கிய போட்டிகளில் இலங்கை வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் காலிங்க குமாரகே, பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்க மற்றும் பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணியும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<