இந்தியாவில் வெண்கலப் பதக்கம் வென்றார் லக்ஷிகா சுகன்தி

60th India InterState Athletics Championship - 2021

92
 

இந்தியாவின், பாட்டியாலா நகரில் இன்று (25) ஆரம்பமாகிய இந்திய மாநிலங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை லக்ஷிகா சுகன்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்திய மாநிலங்களுக்கு இடையிலான 60ஆவது மெய்வல்லுனர் போட்டி பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் இன்று ஆரம்பமாகியது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் பலர் பங்குபற்றுகின்ற இந்தத் தொடரானது எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.  

இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை மெய்வல்லுனர் அணி

இந்த நிலையில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான தகுதியைப் பெறும் நம்பிக்கையுடன் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10 மெய்வல்லுனர்கள் இந்தத் தொடரில் பங்குபற்றியுள்ளனர். 

இதன்படி, போட்டிகளின் முதல் நாளான இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட லக்ஷிகா சுகன்தி வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 13.90 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.  

குறித்த போட்டியில் தங்கப் பதக்கத்தை தமிழ் நாட்டைச் சேர்ந்த கனிமொழி பெற்றுக்கொள்ள, வெள்ளிப் பதக்கத்தை தெலுங்கானவைச் சேர்ந்த அகசரா பெற்றுக்கொண்டார்.

இறுதியாக, 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் லக்ஷிகா சுகன்தி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 4x100 அஞ்சலோட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி களமிறங்கியது.

இதில் இலங்கை அணி போட்டியை 45.30 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

இதனிடையே, குறித்த போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் அனைவரும் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பம்சமாகும்

இதேவேளை, குறித்த போட்டியில் முதலிடத்தை இந்திய நட்சத்திர வீராங்கனை டூட்டி சாந்த் தலைமையிலான இந்தியJ’ அணியும், மூன்றாவது இடத்தை தெலுங்கானா அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இதன்படி, போட்டியின் இறுதிநாளான எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்தது

இதுஇவ்வாறிருக்க, போட்டிகளின் இரண்டாவது நாளான நாளை பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியில் அமாஷா டி சில்வா மற்றும் ஷெலிண்டா ஜென்சன் ஆகிய இருவரும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<