இளையோர் லீக் தொடருக்கான குழாம்கள் அறிவிப்பு

73

19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அணி விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 24) ஆரம்பமாகிய இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை போட்டித் தொடரில் கொழும்பு தெற்கு, கொழும்பு வடக்கு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஒவ்வொரு அணிகளும் ஆரம்ப சுற்றின் போது 4 போட்டிகளில் விளையாடும். அதன்படி, புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை முதலாம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இதனிடையே, இம்முறை இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஒருசில தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு வடக்கு அணியில் மொஹமட் முர்ஷாத், தம்புள்ளை அணியில் யாழ். மத்திய கல்லூரியின் தலைவரும் முன் வரிசை துடுப்பாட்ட வீரருமான நிஷாந்தன் அஜய், வேகப்பந்து வீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், சுழல்பந்து வீச்சாளரான யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரர் சுதர்சன் சுபர்ணன் ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<