கொழும்பு இந்து கல்லுரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையில் இன்றைய தினம் (do sports no drugs) ’போதைப்பொருளற்ற விளையாட்டு’ எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட இந்துக்களுக்கான பெரும் சமர் கால்பந்து போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியை, கொழும்பு இந்துக் கல்லூரி 5-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றியீட்டியது.
குறித்த போட்டியானது யாழ் இந்துக் கல்லுரி மற்றும் கொழும்பு இந்து கல்லூரி மாணவர் சங்கத்தினால் எட்டாவது தடவையாகவும் கொழும்பு இந்து கல்லுரி மைதானத்தில், இன்றைய தினம் காலை வேளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த இந்த போட்டியின் போது கொழும்பு இந்து கல்லூரி அதிபர் ரி.வி.பரமேஸ்வரன் உட்பட, பிரதம அதிதியாக இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் அனுர டி சில்வா, பொதுச் செயலாளர் அந்தோணி பாலேந்திரா ஆகியோர் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கலந்து கொண்டனர்.
அத்துடன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் உள்ளடங்கலாக இவ்விரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக இந்தப் போட்டி நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதலே கொழும்பு இந்து கல்லூரி ஆதிக்கம் செல்லுதியதை காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களுக்குள் கொழும்பு இந்து கல்லூரியை சேர்ந்த எ. பிரவின் முதல் கோலை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கிடைக்கபெற்ற புத்துணர்வுடன் விளையாடிய கொழும்பு இந்து கல்லூரி, போட்டியின் ஐந்தாவது நிமிடம் பி. டிலுஷன் மூலமாக இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டது.
தொடர்ச்சியான இரண்டு கோல்களால் யாழ் இந்து கல்லூரியின் பின்கள வீரர்களிடம் ஏற்பட்ட குழப்பம் காரணமாக களத்தடுப்பு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொழும்பு இந்து கல்லூரி, என். யுஹெந்திரன் மூலமாக 16ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலை அடித்தது.
அதனிடையில், யாழ் இந்து கல்லூரிக்கு ஒரு சில வாய்ப்புக்கள் கிடைக்கபெற்ற போதிலும், சரியான பந்து நகர்த்தல் முன்கள வீரர்களிடம் காணப்படவில்லை. அத்துடன், வேகமாக செயற்பட்ட கொழும்பு இந்து கல்லூரி, தடுப்பு வீரர்களின் தாக்குதல்களை முறியடித்த அதேவேளை சரியான நகர்த்தல்கள் மூலம் முன்கள வீரர்கள் பந்தினை உடனடியாக நகர்த்தியிருந்தனர்.
சொந்த மைதானத்தில் கிடைப்பபெற்ற ஆரவாரம் மற்றும் பலத்த ஆதரவுடன், உற்சாகத்துடன் விளையாடிய கொழும்பு இந்து கல்லூரி, வை. அஷாணன் மூலம் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் தொடர்ச்சியாக 4ஆவது கோலையும் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்கபெற்ற போதும் அவையனைத்தும் யாழ் இந்து கல்லூரி பின்கள வீரர்களால் முறியடிக்கப்பட்டன. அதேநேரம் யாழ் இந்து கல்லூரிக்கு கிடைக்கபெற்ற ஒருசில வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதல் பாதி நேரம் நிறைவின் போது, 4-0 என்ற கோல்கள் அடிப்படையில் கொழும்பு இந்து கல்லூரி முன்னிலை பெற்றிருந்தது.
முதல் பாதி : கொழும்பு இந்து கல்லூரி 4-0 யாழ் இந்து கல்லூரி
இரண்டாம் பாதி நேரத்தின் போது, யாழ் இந்து கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொழும்பு இந்து கல்லூரி முன்கள வீரர்களின் தாக்குதல்களை முறியடித்த அதேவேளை பந்து நகர்த்தல்கள் மூலம் முன்கள வீரர்களுக்கு பந்தினை பெற்றுக்கொடுக்க முயன்றது.
இரண்டாம் பாதி நேரத்தின் போது, யாழ் இந்து கல்லூரி சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக கொழும்பு இந்து கல்லூரிக்கு எதிர்பார்த்த விதத்தில் இலகுவாக கோல் அடிக்க முடியவில்லை. எனினும், போட்டியின் 61ஆவது நிமிடம் மீண்டும் கிடைக்கபெற்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட என். யுஹெந்திரன் தனது இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டார்.
போட்டியின் இறுதிவரை போராடிய யாழ் இந்து கல்லூரிக்கு எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள கொழும்பு இந்து கல்லூரி பின்கள வீரர்கள் வாய்ப்பளிக்கவில்லை. அந்தவகையில் ஆட்டநேர நிறைவின் போது 5-0 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு இந்து கல்லூரி இலகுவாக வெற்றியை சுவீகரித்துக்கொண்டது.
முழு நேரம் : கொழும்பு இந்து கல்லூரி 5-0 யாழ் இந்து கல்லூரி
போட்டியின் பின்னர் ThePapare.com இற்கு கொழும்பு இந்து கல்லூரி பயிற்றுவிப்பாளர் ராஜேந்திரன் (மோகன்) பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், இந்த வெற்றிக்கு பின்னால் நான் மட்டுமல்ல, கல்லூரியின் அதிபர், கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் பலர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துகொள்ளும் அதேநேரம் எங்களுடைய கல்லூரியின் மைதானத்தின் புனரமைப்பின் பின்னர் எங்கள் அணியை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
யாழ் இந்து கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பிரசன்னா கருத்து தெரிவிக்கையில், எங்களால் சரியான விதத்தில் பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. யாழ் மாணவகளின் பெற்றோர் விளையாட்டிலும் பார்க்க பிள்ளைகளை படிப்பில் கவனம் செலுத்த சொல்லுவதால் சிலருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளுக்கு வர முடிவதில்லை. அத்துடன் இன்றைய போட்டியில் விளையாடிய வீரர்களில் 6 பேர் 17 வயதுக்கு குறைந்தவர்கள். எனினும், எதிர் காலத்தில் சிறந்த ஒரு அணியை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கோல் போட்டவர்கள்
கொழும்பு இந்து கல்லூரி – எ. பிரவின் (02’), பி. டிலுசன் (05’), என். யுஹெந்திரன் (16’ மற்றும் 61’), வை. அஷாணன் (21’)
போட்டியின் சிறந்த வீரர்: பி. டிலுஷன்