ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடைபெறவுள்ள, இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளை கொண்ட போட்டித் தொடரில் பங்குபற்றுவதற்காக பங்களாதேஷ் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, பல்வேறான அரிய சாதனைகளை சொந்த மண்ணில் படைத்துள்ள அதேநேரம், கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை மண்ணில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரை 3-0 என்ற அடிப்படையில் வைட்வொஷ் செய்திருந்தமை நினைவு கூறத்தக்கது. அதேநேரம், 17 ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளை மாத்திரமே வெற்றியீட்டியிருந்தாலும், கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்றிருந்த, வலிமைமிக்க இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியை வென்று தனது வல்லமையை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் குறித்த இந்த போட்டிகளில், மூன்று இலங்கையர்கள் பங்களதேஷ் அணிக்கு பயிற்சி உதவிகளை வழங்கவுள்ளனர். அண்மைய காலங்களில் பங்களாதேஷ் அணி திறமைகளை வெளிப்படுத்தி மீண்டெளுவதற்கு வழிநடத்திய இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்திக்க ஹத்துருசிங்க தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ள அதேநேரம், இலங்கை அணியின் நடுவரிசை துடுப்பாட்டத்தை வலுப்படுத்திய முன்னாள் இலங்கை அணியின் வீரர் திலான் சமரவீர துடுப்பாட்ட பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியை வலுப்படுத்தவுள்ளார். அத்துடன், முன்னாள் முதல்தர கழக கிரிக்கெட் வீரரான மரியோ வில்லவராயன் பங்களாதேஷ் அணியின் நிர்வாக அதிகாரியாக செயற்படவுள்ளார்.

நேற்று இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த ரங்கன ஹேரத், ‘’சந்திக்க ஹத்துருசிங்க போட்டியை திட்டமிடும் விதம் எனக்கும் உதவியுள்ளது. பங்களாதேஷ் அணியில் பல இலங்கையர்கள் இருப்பதால், அவர்களுக்கு எங்கள் அணியை பற்றி நன்றாக தெரியும். அதேநேரம், அவர்களுக்கு நாம் எவ்வாறு போட்டியை திட்டமிடுவோம் என்றும் தெரியும். அத்துடன், மூவரும் பங்களாதேஷ் அணியை குறிப்பிடத்தக்க வகையில் வலிமையுள்ள அணியாக மாற்றியுள்ளனர், குறிப்பாக நீண்ட காலமாக பங்களாதேஷ் அணிக்கு பயிற்சியளித்து வரும் சந்திக ஹத்துருசிங்க. மேலும், ஏனைய பயிற்சியளார்களை விட இவர்களுக்கு எங்களை பற்றிய நிறைய தகவல்கள் தெரியும் என்பதால், இது ஒரு சவாலான தொடராக எங்களுக்கு அமையவுள்ளது’’ என்று தெரிவித்தார்.

அதிக விருப்புகளுடன் அசேல குணரத்ன மற்றும்  நிரோஷன் திக்வெல்ல டெஸ்ட் அணிக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், பங்களாதேஷ் அணிக்கெதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் 25.60 பந்துவீச்சு சாரசரியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரங்கன ஹேரத், பங்களாதேஷ் அணிக்கு இம்முறை பாரிய சவாலாக இருப்பார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய இடதுகை சுழல்பந்து வீச்சாளார் மலிந்த புஷ்பகுமார அறிமுக வீரராக களமிறங்கவுள்ளார்.   

‘’மலிந்த புஷ்பகுமார உள்ளுர் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியிருப்பதால், சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்த போதுமான அனுபவங்களை கொண்டுள்ளார். எனினும், 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் இவரை உள்வாங்குவது அணித் தலைவர் மற்றும் வழமையான சுழல்பந்து வீச்சாளர் என்ற வகையில் மிகவும் கடினமான விடயம். ஆனால், தேவை ஏற்படின் மேலதிக இடதுகை சுழல்பந்து வீச்சாளருடன் களமிறங்குவோம்’’ என்று உத்தியோகபூர்வ ஊடகவியலாளருடனான சந்திப்பில் ரங்கன ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக 2014ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 248 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அதேநேரம், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. அத்துடன், இவ்விரு அணிகளும் இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இலங்கை அணி 14 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள அதே நேரம், இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றுள்ளன.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேசிய பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில்,உலகில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை, சொந்த மண்ணில், இலங்கை அணி வைட்வொஷ் செய்து அபார திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. அந்தளவுக்கு எங்களுக்கு அனுபவம் இல்லாவிட்டால் கூட அவர்களுடைய திறமைகளின் அளவுக்கு முடிந்தளவு முயற்சிகளை செய்து இலங்கை அணியை வெற்றிகொள்ள முயற்சி செய்வோம். அத்துடன், டெஸ்ட் போட்டி நடைபெறும் ஐந்து நாளும் இலங்கை அணியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் விளையாடினால் வெற்றி எங்கள் பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார். 

அதேநேரம் பங்களாதேஷ் அணி தனது 16 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை P. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அத்துடன் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொண்ட இறுதி நாடாகிய பங்களாதேஷ் அணி, 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளோம் என்று உலகிற்கு காட்டுவதற்கு, பங்களாதேஷ் அணிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இலங்கைக்கு திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, எனினும் கிரிக்கெட் என்ற வகையில் நாங்களும் ஏனைய அணிகளை போன்றே எம்மை தயார் செய்துள்ளோம். நாங்கள் எதிர்பார்ப்பது என்னவெனில், கிரிக்கெட் விளையாடும் அனைத்து நேரத்திலும் முழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவதே. இலங்கை அணி அவர்களுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். ஆகையினால், அவர்களை நாங்கள் எளிதாக எண்ணிவிட முடியாது. எங்களால் முடிந்த வரை அணியை தயார் செய்யவுள்ளோம்என்று பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்தார்.  

இலங்கை அணியின் நிழல் பயிற்சியளராக முன்னொரு தடவை சேவை செய்த ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் சபையினால், மேற்றகொள்ளபட்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஜிம்பாப்வேயில் நடைபெறவிருந்த முத்தரப்பு போட்டி தொடரொன்றின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் ஆணையை பின்பற்றாமல் அவுஸ்திரேலிய நாட்டில் பயிற்சியாளர் முகாம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக இடைநடுவே திரும்பி வந்தமைக்காக அப்போதைய கிரிக்கெட் சபைத் தலைவர் டி எஸ் டி சில்வா அவர்களினால் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதேநேரம் அப்போதைய இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவினால் மீண்டும் அவரை இணைத்துக்கொள்ள கோரிக்கை விடப்பட்டிருந்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படங்கள் : இலங்கை எதிர் பங்களாதேஷ் – ஊடகவியலாளர் சந்திப்பு

நான் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன், எனினும், இலங்கை கிரிக்கெட் அணிக்கு பங்களிப்பு செய்ய முடியவில்லை என்று ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்பொழுது செய்து கொண்டிருக்கும் விடயங்கள் குறித்து மகிழ்ச்சியாக இருக்கின்றேன் என்று ஹத்துருசிங்க மேலும் தெரிவித்தார்.