மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை, விளையாட்டுக் கழகங்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் கையளிப்பு

112
 

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஹோட்டல் ஈஸ்ட் விடுதியில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற இந்த நிகழ்வில் 7 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் 10 பாடசாலைகளுக்கு இவ்வாறு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

இதன்படி, டிஸ்கோ விளையாட்டுக் கழகம், சென்ட்ரல் லைட் விளையாட்டுக் கழகம், லக்கி விளையாட்டுக் கழகம், யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், மைக்கல் மேன் விளையாட்டுக் கழகம், சிவானந்தா விளையாட்டுக் கழகம் மற்றும் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகங்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இதனிடையே, சென். மைக்கெல் தேசிய பாடசாலை, மெதடிஸ்ட் மத்திய கல்லூரி, சிவானந்தா தேசிய கல்லூரி, இந்துக் கல்லூரி, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, கிராண் மத்திய கல்லூரி, துரைநீலாவேனை மகா வித்தியாலயம், ஏறாவூர் ரகுமானிய்யா மகா வித்தியாலயம், ஏறாவூர் அரபா மகா வித்தியாலயம், பெரியகல்லாறு மத்திய கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிகழ்வில், ரொஷான் ரணசிங்க, சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இராஜாங்க அமைச்சர்களும், சிவனேசதுரை சந்திரகாந்தன், நசீர் அஹமட் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்க உறுப்பினர்களும் கலந்துனொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு விளையாட்டு மைதானங்கள் தலா 15 இலட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

உடனடியாக வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மாவட்டச் செயலாளருக்கு அறிவித்துள்ளது

இதன்படி, ஏறாவூர் பக்தாத் விளையாட்டு மைதானம், காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானம், மீராவோடை அல் ஹிதாயா மைதானம், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மைதானம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காகவும் தலா 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…