ஆபிரிக்காவின் கடைசி அணிகளாக மொரோக்கோ, துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு தேர்வு

216
Courtesy - AFP

ஐவோரி கோஸ்டை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய மொரோக்கோ அணி 2018 FIFA உலகக் கிண்ண போட்டியில் விளையாடத் தகுதிபெற்றதோடு மற்றொரு வட ஆபிரிக்க நாடான துனீஷியாவும் அடுத்த உலகக் கிண்ணத்திற்காக ரஷ்யா செல்ல முன்னேற்றம் கண்டது.

இதன் மூலம் ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் ஐந்து அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. ஏற்கனவே நைஜீரியா, எகிப்து மற்றும் செனகல் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியுள்ளன.

ஐவோரி கோஸ்ட் தொடர்ச்சியாக நான்காவது உலகக் கிண்ண போட்டியில் முன்னேறும் நோக்குடனேயே நேற்று (11) மொரோக்கோவை சொந்த மண்ணில் எதிர்கொண்டது. எனினும் கோல் காப்பாளர் சில்வைன் கொஹவோ (Sylvain Gbohouo) செய்த இரு தவறுகள், முதல் பாதியிலேயே அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

கோல் காப்பாளர் கொஹவோ மொரோக்கோ வீரர் காலிஸ் பவுதைப் கோல் அடிப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது 25 ஆவது நிமிடத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி நபில் டைரர் (Nabil Dirar) பந்தை கோலுக்குள் செலுத்தினார். அப்போது கோல் கம்பத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்த கோல் காப்பாளருக்கு சுதாகரிக்க முடியாமல் போனது.

ஐந்து நிமிடங்கள் கழித்து கொஹவோ மற்றொரு தவறை செய்தார். எதிரணி வீரர் ம்பார்க் பசுபாவை (Mbark Boussoufa) தடுக்க கொஹவோ கோணர் திசையை நோக்கி முன்னோக்கி நகர அந்த இடைவெளியைப் பயன்படுத்தி மெதி பெனடியா (Medhi Benatia) கோலொன்றை அடித்து மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடையச்செய்தார்.

முதல் பாதி: மொரோக்கோ 2 – 0 ஐவோரி கோஸ்ட்

இரண்டாவது பாதியில் மொரோக்கோ அணியின் செர்ஜே அவுரிரிக்கும் கோல் புகுத்த சிறப்பான வாய்ப்பொன்று கிட்டியபோதும் அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளாலும் எவ்வித கோலும் பெறப்படாத நிலையில் மொரோக்கோ 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி 2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: மொரோக்கோ 2 – 0 ஐவோரி கோஸ்ட்

இறுதியில் ஆபிரிக்க மண்டல தகுதிகாண் போட்டியின் C குழுவில் கடந்த ஆறு போட்டிகளில் எதிரணிக்கு ஒரு கோலைக் கூட விட்டுக் கொடுக்காத மொரோக்கோ அணி தனது உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்துகொண்டது. மொரோக்கோ 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது முதல் தடவையாகும்.

பலம் கொண்ட மற்றொரு அணியை வீழ்த்தியது சுபர் சன்

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் 94ஆவது போட்டியில்…

இதேவேளை A குழுவில் தனது சொந்த மண்ணில் நேற்று லிபியாவை எதிர்கொண்ட துனீஷியா அந்த போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டு. உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

துனீஷியா உலகக் கிண்ணத்திற்கு முன்னேறி இருப்பது இது ஐந்தாவது தடவையாகும். எனினும் 1998-2006 வரை  தொடர்ச்சியாக மூன்று உலகக் கிண்ணத்தில் விளையாடிய பின் மற்றொரு உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவது இது முதல் முறையாகும்.

ஆபிரிக்க மண்டலத்தின் D குழுவில் கடந்த வெள்ளிக்கிழமை (10) நடந்த தென்னாபிரிக்காவுடனான போட்டியில் 2-0 என வெற்றிபெற்ற செனகல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. நைஜீரியா மற்றும் எகிப்து இரு நாடுகளும் கடந்த மாதம் ஆபிரிக்க மண்டலத்தில் முதல் இரு அணிகளாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றன.

ஆபிரிக்க மண்டலத்தில் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற ஒட்டுமொத்தமாக 53 நாடுகள் போட்டியிட்டதோடு, இதில் இரண்டாவது சுற்றுக்கு 20 அணிகள் முன்னேறின. தலா ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு குழுநிலைப் போட்டியாக நடைபெற்ற ஆட்டங்களில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பெற்ற அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

இதன்படி உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள 32 அணிகளில் இதுவரை 26 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன.

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற அணிகள்

ஐரோப்பா: பெல்ஜியம், இங்கிலாந்து, ஜேர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, ரஷ்யா, செர்பியா, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல்

ஆபிரிக்கா: எகிப்து, நைஜீரியா, செனகல், மொரோக்கோ, துனீஷியா

ஆசியா: ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா

வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன்: கொஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா

தென் அமெரிக்கா: பிரேசில், உருகுவே, ஆர்ஜன்டினா, கொலம்பியா