இலங்கை கிரிக்கெட்டில் ஏற்படுத்தப்படும் அதிரடி மாற்றங்கள்!

1382

தேசிய விளையாட்டு குழு, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் அணியில் பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என கடுமையான தோல்வியை இலங்கை அணி சந்தித்திருந்த நிலையில், அணியின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

>> தேர்வாளர் பதவியினையும் இராஜினாமா செய்த அசன்த டி மெல்

அதன்படி, நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாம செய்த காரணத்தால், புதிய தேர்வுக்குழுவை நியமிக்கவேண்டிய தேவையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள நிலையில், பிரகாசிப்புக்கு ஏற்ப ஒப்பந்தங்களை வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தும்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கெட் சபையில் புதிய பதவி ஒன்றை வழங்குவது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு உதவும் வகையில், பணிப்பாளர் அல்லது ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தேசிய அணியின் வீரர்களின் உடற்தகுதி மற்றும் ஒழுக்கம் தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கை தேசிய அணியின் வீரர்கள், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்னர், எதிர்வரும் 3ம் திகதி உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

குறித்த இந்த உடற்தகுதி பரிசோதனையில், தோல்வியடையும் வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இணைக்கப்படமாட்டார்கள் எனவும், இதனை தலைமை பயிற்றுவிப்பாளர்  மிக்கி ஆர்தர் மற்றும் உடற்கூறு முகாமையாளர் க்ராண்ட் லூடென் ஆகியோர் அவதானிப்பர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020-21 பருவகாலத்துக்கான உள்ளூர் போட்டிகள் கொவிட்-19 வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நடைபெறவில்லை. குறித்த விடயம் தொடர்பிலும், இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<