எனது பரிந்துரையில் தான் சர்பராஸ் அணியில் இடம்பிடித்தார் – ரிஸ்வான்

162

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையே அண்மையில் நிறைவடைந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் ரிஸ்வானுக்குப் பதிலாக அந்த அணியின் முன்னாள் தலைவரும், அனுபவ வீரருமான சர்பராஸ் அஹ்மட் மீண்டும் அணியில் இடம்பிடித்து விளையாடியது மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுபர் லீக் ஆரம்பமாவதற்கு முன் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ரிஸ்வான், பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதற்கு தான் தகுதியற்றவன் என கருதுவதாக தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு அப்போதைய தலைமைப் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்கிடம் நான் என்ன சொன்னேன் என்று நீங்கள் கேட்கலாம். என்னால் சிறப்பாக செயல்பட முடியாததால் அடுத்த போட்டியில் விளையாட தகுதி இல்லை என்று தனிப்பட்ட முறையில் நினைத்தேன் என்றார்.

கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரிஸ்வானால் 262 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் சராசரி 21.84 ஆகும். ரிஸ்வானின் இந்த சரிவுடன், அவரது டெஸ்ட் துடுப்பாட்ட சராசரியும் கிரிக்கெட் 38.13 ஆக சரிந்தது. ஆனால் விக்கெட் காப்பாளராக தனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கி வந்தார்.

இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா திடீரென நீக்கப்பட்டதை அடுத்து, அதன் இடைக்கால தலைவராக நஜாம் சேத்தி பொறுப்பேற்றார். அத்துடன், பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் வீரர் சஹீட் அப்ரிடியும் நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மொஹமட் ரிஸ்வானுக்குப் பதிலாக அந்த அணியின் முன்னாள் தலைவர் சர்பராஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்பராஸ் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்.

அந்தப் போட்டியில் சர்பராஸின் விக்கெட் காப்பு மிகவும் மோசமாக இருந்தபோதிலும் (சில பிடியெடுப்புகள் மற்றும் ஸ்டம்ப் செய்யும் வாய்ப்பு தவறவிட்டது), அவரது துடுப்பாட்டம் மிகச் சிறந்த முறையில் இருந்தது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் சர்பராஸ் மூன்று அரைச் சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் மொத்தம் 335 ஓட்டங்களைக் குவித்தார், மேலும் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்த அவர், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இந்த நிலையில், தனக்குப் பதிலாக சர்பராஸ் அஹமட் டெஸ்ட் அணியில் ஏன் விளையாடினார்? மற்றும் அவரது துடுப்பாட்டத் திறமை தொடர்பில் மொஹமட் ரிஸ்வான் கருத்து தெரிவிக்கையில்,

சர்பராஸின் திறமையைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் நான் விரும்பியது இதுதான். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் அதனால் அவருக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டமை நியாயம் என நினைக்கிறேன். குறிப்பாக அவரை அணியில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டேன். திறமையை வெளிப்படுத்துபவர்கள் பாகிஸ்தானுக்காக விளையாட தகுதியானவர்கள்.

ஒவ்வொரு வீரரும் இதுபோன்ற காலகட்டங்களை கடந்து செல்கிறார்கள். சில இன்னிங்ஸ்களில் தோல்வியடைந்ததால் அணியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று சில வீரர்கள் கூறினர். ஆனால் நான் சிறப்பாக செயல்படாததால், அணியின் பயிற்சியாளர் மற்றும் தலைவரிடம் சென்று என்னை அணியில் இருந்து நீக்கச் சொன்னேன். மேலும் இரண்டு வீரர்கள் இந்த உரையாடலைப் பார்த்தனர் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக வலம் வந்து கொண்டிருக்கின்ற மொஹமட் ரிஸ்வான், பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடிய போது அவருக்கு அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. கராச்சி கிங்ஸ் அணிக்காக இறுதியாக ஆடிய இரண்டு ஆண்டுகளில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஆனால் 2021ஆம் ஆண்டு முல்தான் சுல்தான் அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அந்த அணியை சிறந்த முறையில் வழிநடத்திய ரிஸ்வான் முல்தான் சுல்தான் அணிக்கு முதல் பிஎஸ்எல் சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில், கராச்சி கிங்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக விளையாட கிடைக்காதது தொடர்பில் ரிஸ்வான் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பிஎஸ்எல் போட்டியின் போது நான் கராச்சி கிங்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, எனக்கு எந்த வேதனையும் ஏற்படவில்லை. அவர்கள் (கராச்சி கிங்ஸ்) அணிக்கு நேர்மையானவர்கள் என்று நான் நினைத்தேன். அந்த நேரத்தில், என்னை அணியில் இருந்து வெளியேற்றுவது அணியின் தேவையாக இருந்தது என தெரிவித்தார்.

ஆனால் தற்போது முல்தான் சுல்தான் அணியின் தலைவராக மொஹமட் ரிஸ்வான் பணியாற்றி வருகிறார். அதன்படி, அவரது தலைமையில் முல்தான் சுல்தான் அணி நாளை (13) முதல் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<