தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மிதுன்ராஜ், வக்ஷான் பதக்கம் வென்று அசத்தல்

South Asian Senior Athletics Championship 2025

7
South Asian Senior Athletics Championship 2025

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் நேற்று (24) ஆரம்பமாகிய 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளன்று இலங்கைக்கு 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 10 பதக்கங்கள் கிடைத்தன.

இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் யாழ்ப்பாணம், பருந்தித்துறையைச் சேர்ந்த சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். அதேபோல், ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தலவாக்கலை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். அப் போட்டியை நிறைவுசெய்ய 14 நிமிடங்கள், 23.21 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதனிடையே, 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது, ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது. சமோத் யோதசிங்க மற்றும் சபியா யாமிக் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர், அதிவேக ஓட்ட வீராங்கனையாக மகுடம் சூடியது மட்டுமல்லாமல், தங்களது ஓட்டங்களில் புதிய போட்டிச் சாதனைகளையும் நிலைநாட்டினர்.

இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை சமோத் யோதசிங்க 10.30 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் பங்குபற்றிய டி. தியலவத்த (10.64 செக்.) நான்காம் இடத்தைப் பிடித்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.53 செக்கன்களில் நிறைவு செய்த மொஹமட் பாத்திமா சபியா யாமிக் தங்கப் பதக்கத்தை வெல்ல, 11.72 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த அமாஷா டி சில்வா வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இந்த நிலையில், இருபாலாருக்குமான முப்பாய்ச்சல் போட்டியிலும் இலங்கை தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்தது. இதில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பசிந்து மல்ஷான் (16.19 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் மதுஷானி ஹேரத் புதிய போட்டிச் சாதனையுடன் (13.26 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

அத்துடன், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் சஷினி உபேஷ்கா (12.79 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான குண்டு எறிதலில் ஓவினி சந்த்ரசேகர (13.03 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினர் (3:20.25) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தனர். வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் காலிங்க குமாரகே, நதீஷா ராமநாயக்க, கல்ஹார இந்துப மற்றும் சயுரி மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதேவேளை, 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதல் நாளில் இலங்கை 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

இன்று (25) போட்டியின் இரண்டாவது நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<