மகளிர் IPL ஏலத்துக்கு 15 இலங்கை வீராங்கனைகள் பதிவு

172

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண மகளிர் பிரிமீயர் லீக் (Womens Premier League) தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 15 வீராங்கனைகள் பதிவுசெய்துள்ளதாக IPL நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆடவருக்கான Indian Premier League (IPL) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மகளிருக்கான IPL தொடர் நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மகளிருக்கான முதலாவது IPL கிரிக்கெட் தொடரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மும்பையில் நடத்தவுள்ளது. மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்ற இந்த தொடருக்கு ‘மகளிர் பிரீமியர் லீக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அங்குரார்ப்பண மகளிர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் 13ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஏலத்திற்கு 1,525 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 409 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செவ்வாய்க்கிழமை (07) வெளியிட்டது.

இதில் 246 பேர் இந்திய வீராங்கனைகள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இவர்களில் 202 வீராங்கனைகள் சர்வதேசப் போட்டியில் விளையாடிவர்கள்.

ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்கள் முதல் 18 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கலாம். அணியில் மொத்தம் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கலாம். அந்த ஐவரில் ஒரு வீராங்கனையை ஐசிசியின் அங்கத்துவ நாடுகளில் இருந்து தேர்வு செய்யலாம்.

இதன்படி, மொத்தம் 90 பேர் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். அவர்களில் 60 பேர் இந்திய வீராங்கனைகள். மீதமுள்ள 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு விருப்பமான வீராங்கனை ஒருவரை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபா வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையாக ரூ.50 இலட்சம், ரூ.40 இலட்சம், ரூ.30 இலட்சம், ரூ.20 இலட்சம் மற்றும் ரூ.10 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு 10 இலட்சம் மற்றும் 20 இலட்சம் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைக்ளுக்கான அதிகபட்ச அடிப்படை ஏலத்தொகையாக 50 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி, மெக் லானிங், அலீசா ஹீலி, இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டான், நியூசிலாந்தின் சோபி டேவின், மேற்கிந்திய தீவுகளின் டியாந்த்ரா டோட்டின் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலப்பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அனைத்து வீராங்கனைகளுக்கும் 30 இலட்சம் இந்திய ரூபா அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை பணப்பெறுதியில் கிட்டதட்ட 13 மில்லியன்களாகும்.

இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து, அனுஷ்கா சன்ஜீவனி, இனோகா ரணவீர, நிலக்ஷி டி சில்வா, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹசினி பெரேரா, கவீஷா தில்ஹாரி, ஓஷதி ரணசிங்க, மல்ஷா ஷெஹானி, அசினி குலசூரிய, உதேஷிகா பிரபோதனி, தாரிகா செவ்வன்தி, சுகன்திகா தஸநாயக, இனோகா பெர்னாண்டோ ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

மார்ச் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெற உள்ளன. இவை அனைத்தும் D.Y. Patil மற்றும் Brabourne மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<