இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் B மட்டத்திலான நான்கு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

இன்று ஆரம்பித்த ‘B’ மட்ட போட்டிகளில்,  பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் களுத்துறை நகர கழகப் போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன், மூன்று போட்டிகள் இன்றைய நாள் ஆரம்பித்தன. பாணதுறை விளையாட்டு கழகம் பல்வேறான திறமைகளை இன்றைய நாள் வெளிபடுதியிருந்தாலும் வெற்றி பெற மூன்று ஓட்டங்களே பெற வேண்டிய நிலையில் போட்டி நிறைவு பெற்றதால் துரதிர்ஷ்டமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது.  

பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

மூன்றாவதும் இறுதியுமான நாளான இன்று 112 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த களுத்துறை நகர கழகம் மேலும் 75 ஓட்டங்களால் பின்னிலை பெற்றிருந்தது. இன்றைய தினம் சிறப்பாக துடுப்பாடிய களுத்துறை நகர கழகம் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக 119.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 342 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு 155 ஓட்டங்களால் முன்னிலை அடைந்தது.

இரண்டாம் இன்னிங்சில் 120 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்த களுத்துறை நகர கழகம் சார்பாக ஐந்தாவது விக்கெட்டுக்க்காக களமிறங்கிய நிபுன கமகே சிறப்பாக துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரிந்து சிறிவர்தன மற்றும் மங்கள குமார முறையே 50, 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பாணதுறை விளையாட்டு கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம 107 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

155 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பாணதுறை விளையாட்டு கழகம் 13 ஓவர்களில் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

போட்டி நிறைவுற குறைந்தளவு ஓவர்களே எஞ்சியுள்ள நிலையில், களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிசல் ரந்திக வெற்றி பெறும் நோக்கில் அதிரடியாக துடுப்பாடி 42 பந்துகளில் 80 ஓட்டங்களை விளாசினார். எனினும் குறித்த 13 ஓவர்களுக்குள் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுகொண்டமையினால் வெறும் மூன்று ஓட்டங்களால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.

களுத்துறை நகர கழகம் சார்பாக பந்துவீச்சில் மங்கல குமார மற்றும் யோஹான் டி சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 353 (80.1) – சாமர சில்வா 58, சரித புத்திக 55*, சஞ்சய சதுரங்க 50, மொஹமட் ஷில்மி 43, மங்கள குமார 4/100

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) 166 (61.1) – மங்கல குமார 41, ரிஷித் உபமல் 41, கயான் சிரிசோம 7/53

களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 342 (119.1) – நிபுன கமகே 148*, தரிந்து சிறிவர்தன 50, கயான் சிரிசோம 6/107

பாணதுறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 153/6 (13) – நிசல் ரந்திக 80, சரித புத்திக்க 29, மிஷென் சில்வா 16, மங்கல குமார 76/2, யோஹான் டி சில்வா 31/2


இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

இவ்விரு அணிகளுக்குமான போட்டி இன்று வெலிசர மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பொலிஸ் விளையாட்டு கழகம் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய கடற்படை விளையாட்டு கழகம் முதல் மூன்று விக்கெட்டுகளை 21 ஓட்டங்களுக்கு இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய குசல் எதுசூரிய சிறப்பாகத் துடுப்பாடி முதலாம் நாள் ஆட்டம் நிறைவின் போது ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களுடனும், அவருடன் மறுமுனையில் அஷன் ரணசிங்க 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.   

பொலிஸ் கழகம் சார்பாக சுவஞ்சி மதநாயக்க சிறப்பாக பந்து வீசி முதலிரண்டு விக்கெட்டுக்களை 21 ஓட்டங்களுக்கு வீழ்த்தி கடற்படை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) 289/7 (93) – குசல் எதுசூரிய 133*, புத்திக்க ஹசரங்க 55,  சுவஞ்சி மதநாயக்க 76/3


இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லங்கன் கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய விமானப்படை விளையாட்டு கழகம் 73 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 23௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. விமானப்படை அணி சார்பாக அசிர எறங்க 59 ஓட்டங்களையும், ரங்க திசாநாயக்க 41 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பதிவு செய்து கொண்டனர்.

லங்கன் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய நவீன் கவிகார 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 1 விக்கெட் இழப்பிற்கு 3௦ ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்க்ஸ்) 230 (73) – அசிர எறங்க 59, ரங்க திசாநாயக்க 41, லஹிறு ஸ்ரீ லக்மால் 36, ஹஷான் ஜேம்ஸ் 32, நவீன் கவிகார 63/5, ஷிரான் பெர்னாண்டோ 47/3, ரஜீவ வீரசிங்க 70/2

லங்கன்  கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்க்ஸ்) 30/1 (15)ஷசீன் பெர்னாண்டோ 13*, பசிந்து பிம்சார 15*, சஹன் ஜயவர்தன 10/1


குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை பௌதீக கலாச்சார கழகம்

மக்கோனவில் இன்று ஆரம்பித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய களுத்துறை பௌதீக கலாச்சார கழக அணி ரமேஷ் செல்வராஜின் அதிரடியான பந்து வீச்சில் 42 ஓட்டங்களுக்கு 4  விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது.

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ருவந்த ஏக்கநாயக்க, ஹஷான் பிரபாத்துடன் இணைந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர். ருவந்த ஏக்கநாயக்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை பெர்னாண்டோவின் பந்து வீச்சில் தமித்திடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து, துடுப்பாடிய ஹஷான் பிரபாத் 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக அணி துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இறுதியில் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக அணி 55.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

களுத்துறை பௌதீக கலாச்சார கழக அணி சார்பாகப் பந்துவீச்சில் ரமேஷ் செல்வராஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய களுத்துறை பௌதீக கலாச்சார கழக அணி ஆட்ட நேர முடிவின் போது 143 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் காணப்பட்டது. களுத்துறை பௌதீக கலாச்சார கழக அணி சார்பாக பத்தும் நிஸ்ஸங்க 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ருவந்த ஏக்கநாயக்க 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 197 (55.4) – ஹஷான் பிரபாத் 82, ருவந்த ஏக்கநாயக்க 46, தர்ஷன மஹவத்த 3௦, சாரங்க ரஜகுரு 19, ரமேஷ் செல்வராஜ் 63/6

களுத்துறை பௌதீக கலாச்சார கழகம் (முதல் இன்னிங்ஸ்) 143/6 (34)  – பத்தும் நிஸ்ஸங்க 64, பஹாட் பாபர் 24, ருவந்த ஏக்கநாயக்க 3/27