இலங்கை அணி தொடர்பில் வெளியான காணொளிக்கு விளையாட்டு அமைச்சரின் பதில்

863

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் பொய்யான செய்திகளை (gossip) சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவதால் குறித்த வீரர்களின் நற்பெயருக்கு கலங்கத்தையும், அவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பினையும் ஏற்படுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு இலங்கை வீரர்கள் உடை மாற்றும் அறையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும், அங்கு பேசியிருந்த விடயங்களும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வைரலாக வெளியாகியிருந்தன. இதனையடுத்து குறித்த வீரர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கை அணிக்கு திடீர் வெற்றி எப்படி சாத்தியமாகியது?

தென்னாபிரிக்காவின் டேர்பன் – கிங்ஸ்மீட் மைதானம், இளம் இலங்கை…

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இலங்கை வீரர்கள் தொடர்பில் வெளியான காணொளி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இந்த வெற்றியானது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்தது. எனவே வீரர்களைப் போல ரசிகர்களாகிய நாங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடினோம். இது இவ்வாறிருக்க, இலங்கை அணிக்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்த குசல் ஜனித் பெரேரா பயிற்சியாளருக்காக பெற்றுக்கொண்ட வெற்றி என குறிப்பிடப்பட்ட காணொளியொன்று அன்றைய தினமே ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்தன. இந்த காணொளியைப் பார்த்தவர்களுக்கு அவருடைய கருத்து தவறாக போய் சேர்ந்துவிட்டது. நீங்கள் பயிற்சியாளருக்காக விளையாடினீர்களா? அல்லது நாட்டுக்காக விளையாடினீர்களா என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுதான் எமது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஒரு விடயத்தை மாத்திரம் சொல்கின்றேன். தற்போதைய பயிற்றுவிப்பாளரும் இலங்கையர் தான். பயிற்றுவிப்பாளருக்காக விளையாடுவதில் எந்த தவறும் கிடையாது. நான் றக்பி விளையாடிய போது பல போட்டிகளில் தோல்வியைத் தழுவி அதன்பிறகு  வெற்றி பெற்றால் உடனே பயிற்றுவிப்பாளர்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறேன். இந்த வெற்றி உங்களுக்கே சமர்ப்பணம் என்றும் சொல்லி இருக்கிறோம். எனவே பொதுவாக வீரர்களின் உடை மாற்றும் அறையில் இவ்வாறு வீரர்கள் பேசுவது சாதாரண ஒரு விடயம். ஆனால் அதை வீடியோ செய்து ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் அனுப்பியது மிகப் பெரிய தவறாகும். எனவே வேண்டாத நபர்கள் தமது சுயநலத்துக்காக இவ்வாறு செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எனவே எமது கிரிக்கெட் வீரர்களினால் தெரிவிக்கப்பட்ட இந்த காணொளி வெளியான மறுகணமே ஊடகங்கள் தமது செய்திகளில் இதை தலைப்புச் செய்தியாக ஒளிபரப்புச் செய்திருந்தது. உண்மையில் இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் ஒருபோதும் பெரிதுபடுத்தக் கூடாது. அந்த வீரர்களின் வாழ்க்கைக்கு இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குசல் ஜனித்தின் இன்னிங்ஸை இன்று முழு உலக கிரிக்கெட்டும் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. அதேபோல மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் பெற்ற இந்த வெற்றியினை நாம் தொடர வேண்டும். அதற்கு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதேபோல, எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க வீரர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி இடம்பெற்றால் அந்த வீரர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தனித்துப் பேராடிய குசல் பெரேரா டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கைஅணியின்…

அதேபோல குறித்த சம்பவம் தொடர்பில் அணியின் முகாமையாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அது தற்போது எனக்கு கிடைத்துள்ளது. இந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அந்த அறிக்கை தொடர்பில் எந்தவொரு கருத்தையும் நான் முன்வைக்க மாட்டேன். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சினால் அது தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க