தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, தனது முதலாம் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, போதிய வெளிச்சமின்றி ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது, 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தென்னாபிரிக்க அணியைவிட இன்னும் 105 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 267 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி 98.5 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதலாவது விக்கெட்டாக வெர்னன் பிலாண்டர் 13 ஓட்டங்களுக்கு நுவன் ப்ரதீப்பின் பந்து வீச்சில் துஸ்மந்த சமீரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய இறுதி வரிசை வீரர்கள் தமது விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி வரை போராடிய குவிண்டன் டி கொக் 37 ஓட்டங்களுடன் நுவன் ப்ரதீப்பின் பந்து வீச்சியில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்ட்த்தில், ஜே. பி. டுமினி 63 ஓட்டங்களையும் ஸ்டெபன் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒன்பதாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கேசவ் மகாராஜாவின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் இவர் சிறந்த பந்து வீச்சு பிரதியினை இன்று பதிவு செய்தார். நுவன் ப்ரதீப் 66 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின்னர், தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, கைல் அப்போட் மற்றும் வெர்னன் பிலாண்டர்ரின் வேகப்பந்தில் சிக்குண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை 22 ஓட்டங்களில் இழந்தது. இலங்கை அணியின் முதலாவது விக்கெட் ஓட்ட எண்ணிக்கை பத்தாக இருந்தபோது திமுத் கருணாரத்ன 5 ஓட்டங்களுக்கும், இரண்டாம் விக்கெட், அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேரா 7 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் ஆட்டமிழந்தனர்.

அடுத்த குமார் சங்கக்கார என வர்ணிக்கப்பட்ட குசல் மென்டிஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓட்டங்கள் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். கைல் அப்போட்டின் வேகப் பந்தில் சிக்குண்ட அவர் விக்கெட் காப்பாளர் குவிண்டன் டி கொக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ், கௌஷல் சில்வாவுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக தடுத்தாடிய கௌஷல் சில்வா 59 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை வெர்னன் பிலாண்டரின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக துடுப்பாடிய எஞ்சலோ மெத்திவ்ஸ் 69 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரபடாவின் பந்து வீச்சில் டீன் எல்கரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அத்துடன், தினேஷ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் முறையே 28, 24 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை LBW முறையில் ஆட்டமிழந்தனர். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஏழாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய தனஞ்சய டி சில்வா, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை ஆட்டமிழக்காமல் 69 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரிகள் உள்ளடங்கலாக 43 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

ஸ்கோர் விபரம் :