இலங்கை – தென்னாபிரிக்கா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

Sri Lanka Tour of South Africa 2024

84

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் 2024-25 உள்நாட்டு சீசனுக்கான சர்வதேசப் போட்டி அட்டவணை நேற்று (03) அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் சீசனில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.

சர்வதேசப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை A கிரிக்கெட் அணியும் ஆகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் இலங்கை A அணி, தென்னாபிரிக்கா A அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளிலும், 2 நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதனையடுத்து இலங்கை ஆடவர் தேசிய அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரானது ஐசிசி இன் 2023-2025 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் ஓர் அங்கமாக நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கைக்கும், தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி முன்னர் போர்ட் எலிஸபெத் என அழைக்கப்பட்ட ஜீகிபெர்ஹாவில் டிசம்பர் 5ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை நடைபெறும்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் 2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து முதல் தடவையாக தோற்கடித்து டெஸ்ட் தொடரில் முழுமையான (2 – 0) வெற்றியை ஈட்டி வரலாற்று சாதனை படைத்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி அப்போது விளையாடிய அதே மைதானங்களில் தான் இம்முறையும் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

அதேபோல, இலங்கை அணி இறுதியாக 2020 டிசம்பரில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியதுடன், 2க்கு 0 என குறித்த தொடரை குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கையுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தென்னாபிரிக்கா அணி விளையாடவுள்ளது. இந்த தொடரானது டிசம்பர் 10ஆம் திகதி முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மகளிர் அணியின் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது 3 ஒருநாள், 3 T20i மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<