டிக்கெட் வருமானத்தை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட்

Australia tour of Sri Lanka 2022

111

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான டிக்கெட் விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்கு நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணி மூன்று T20I, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

>>பலமான ஆஸி. அணியை சொந்த மண்ணில் வீழ்த்துமா இலங்கை?

குறித்த இந்த தொடருக்கான முதலிரண்டு T20I போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்பனையாகியிருந்தன. இவ்வாறான நிலையில், முழு தொடருக்குமான டிக்கெட்டுகள் விற்பனையாகும் வருமானத்தை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, மக்களின் தேவைக்காக இந்த பணம் முழுவதும் விளையாட்டுத்துறை அமைச்சிடம் நன்கொடையாக கையளிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மெஹான் டி சில்வா இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மக்களின் சுகாதார தேவைகளுக்காக கடந்தவாரம் நன்கொடையாக வழங்கியிருந்தது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டி நாளைய தினம் (07) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<