SLC T-20 லீக்கில் வெற்றிபெறும் அணிக்கு 20 இலட்சம் பணப்பரிசு

683

சர்வதேச வீரர்களை உள்ளடக்கி நடைபெறவிருந்த லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கு பதிலாக, உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கவுள்ள SLC T-20 லீக்கிற்கான பரிசு விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (17) அறிவித்துள்ளது.

SLC T-20 லீக் தொடரின் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் விழா, இன்றைய தினம் கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போதே பரிசுத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

தேசிய அணி வீரர்களின் தலைமையில் இம்மாத இறுதியில் SLC டி-20 தொடர் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் SLC டி-20 தொடரில்……

இதன்படி SLC T-20 லீக் தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் அணிக்கு 20 இலட்சம் ரூபா பணப்பரிசு மற்றும் கிண்ணம் வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 15 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன், நடைபெறவுள்ள அனைத்து லீக் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாவும், ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்படும் வீரருக்கு 25 ஆயிரம் ரூபாவும் பரிசளிக்கப்படவுள்ளது. அத்துடன் போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு போட்டிக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, தம்புள்ளை மற்றும் காலி என நான்கு அணிகளுக்கும் முறையே தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், திசர பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

போட்டிகள் அனைத்தும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களான கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம், கண்டி பல்லேகலை மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி கிரிக்கெட் மைதானங்களில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் தலா இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி பிற்பகல் 2 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் தரத்திலான இந்த போட்டித் தொடரை நேரடியாக பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் போட்டிகளை பார்வையிடுவதற்கு டிக்கெட்டுகள் அவசியமில்லையெனவும், இலவசமாக ரசிகர்கள் போட்டிகளை பார்வையிடலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பில் குறிப்பிட்ட SLC T-20 லீக் தொடரின் பணிப்பாளர் சஜித் பெர்னாண்டோ,

நான் வீரர், பயிற்றுவிப்பாளர், முகாமையாளர் என அனைத்து பதவிகளிலும் இருந்திருக்கிறேன். இதனால், வீரர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு என்ன தேவை என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த தொடரை நடத்துவதற்கு என்னால் முடியும் என நினைக்கிறேன். எனக்கு பக்கபலமாக குழுவொன்று உள்ளது.

இம்முறை விளையாடவுள்ள SLC T-20 லீக் தொடரில் பரிசுத் தொகை, வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் என்பவை அதிகமாக வழங்கப்படுகிறது. அத்துடன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் சர்வதேச போட்டிகள் அளவிற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பகல் மற்றும் இரவு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியுமாக இருக்கும். பங்கேற்கும் நான்கு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள்என தெரிவித்தார்.

SLC T-20 லீக் தொடர்பில் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

“SLC T-20 லீக் தொடரானது, லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கு பதிலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாம் ஐசிசியிடம் கால இடைவேளை கோரியிருந்ததுடன், சர்வதேச வீரர்களை அழைத்து லங்கன் பிரீமியர் லீக்கை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தோம்.

எனினும், இம்முறை குறித்த தொடரை எம்மால் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்த கால இடைவேளை எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வருடம் லங்கன் பிரீமியர் லீக்கை நடத்த எதிர்பார்க்கிறோம். எவ்வாறாயினும் தற்போது நாட்டிலுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் SLC T-20 லீக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகலதுறை ஆட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தனன்ஜய டி சில்வா

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஒருமாத……

சர்வதேச போட்டிகளில் விளையாடிய எமது அனுபவ வீரர்களுடன், இளம் வீரர்கள் போட்டிகளில் விளையாடும் போது, அவர்களிடம் உள்ள அச்சத்தை போக்க முடியும். அத்துடன் தேசிய வீரர்கள் எப்படி செயற்படுகின்றார்கள் என்பதையும் கற்றுக்கொள்ள முடியும்என்றார்.

இதேவேளை சில அனுபவ வீரர்கள் இந்த போட்டித் தொடரில் இணைக்கப்படவில்லை. குறிப்பாக சச்சித்ர சேனநாயக்க, சீகுகே பிரசன்ன, நுவான் குலசேகர, சாமர கபுகெதர, டில்ஷான் முனவீர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஊடகவியலாளர்கள்வீரர்கள் ஒதுக்கப்படுகின்றனரா?” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஏஷ்லி டி சில்வா,

இந்த போட்டியில் அனுபவ வீரர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அணியிலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்பது இல்லை. நாம் புதிதாக இளம் வீரர்களை அணிகளுக்குள் கொண்டு வந்துள்ளோம். அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்கள் விளையாடும் போது, அவர்களுக்கு சிறந்த மனநிலை உருவாகும்.

முக்கியமாக ஒருநாள் போட்டிகளை விட T-20 போட்டிகளில் விளையாடுவதில் இளம் வீரர்கள் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். அவர்களிடம் உள்ள பயத்தை நீக்கி, சாதாரணமாக விளையாட முடியும். இதன் காரணமாகவே சில அனுபவ வீரர்கள் அணிக்குழாம்களில் இணைக்கப்படவில்லை. என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<