23 வயதிற்குட்பட்டோர் தொடரின் முதல் போட்டியில் இராணுவ விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றி

198

பன்னிபிட்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவர் ஹிமாஷ லியனகே இராணுவ விளையாட்டுக்கழகம் சார்பாக சதமடித்தார்.

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை கிரிக்கட் சபை 23 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் தர போட்டித்தொடரின் முதல் போட்டியில் இராணுவ விளையாட்டுக்கழகம் ராகம கிரிக்கட் கழகத்தை 156 ஓட்டங்களால் இலகுவாக வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராகம கிரிக்கட் கழகத்தின் தலைவர் லஹிரு மிலந்த முதலில் இராணுவ விளையாட்டுக்கழகத்தை  துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் லியோ பிரான்சிஸ்கோ மற்றும் ரந்திக இருவரும் முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். எனினும் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கினர்.  குறிப்பாக,லியனகே 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 110 பந்துகளில் 127 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.

வலதுகைத் துடுப்பாட்ட வீரர் நலின் பெரேராவும் பழைய லும்பினி கல்லூரி ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான ஷஷின் தில்ரங்கவும் முறையே 37 மற்றும் 40 ஓட்டங்களைத் தமது அணி சார்பில் பெற்றுக் கொடுத்தனர். 50 ஓவர்கள் நிறைவில் இராணுவ விளையாட்டுக் கழகம் 7 விக்கட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பதிவு செய்தது. ராகம கிரிக்கட் கழகம் சார்பாக வேகப்பந்து வீச்சாளர் உதித மதுஷான் அவர் வீசிய 10 ஓவர்களில் 51 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

300 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராகம கிரிக்கட் கழகத்தால் இராணுவ விளையாட்டுக்கழக பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமற் போனது. ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்ட ராகம கிரிக்கட் கழகம் 36 ஓவர்களுக்குள் 143 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேலையில் தனது அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிமுவேல் கெர்பர் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். சமிந்த பெர்னாண்டோ 27 ஓட்டங்களை எடுத்தார். பழைய லைசியம் சர்வதேசப் பாடசாலை மாணவரான வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சஞ்சீவ் குமாரஸ்வாமி 3 விக்கட்டுகளைக் கைப்பற்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சிக ரித்ம மற்றும் இடை வேகப்பந்து வீச்சாளர் நலின் பெரேரா இருவரும் தலா 2 விக்கட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இராணுவ விளையாட்டுக்கு கழகம் – 50 ஓவர்களில் 299/7. ஹிமாஷ லியனகே 127*, நலின் பெரேரா 37, ஷஷின் தில்ரங்க 30, லியோ பிரான்சிஸ்கோ 26, யொஹான் டி சில்வா 22, உதித மதுஷான் 3/51.

ராகம கிரிக்கட் கழகம் – 35.5 ஓவர்களில் 143. சிமுவேல் கெர்பர் 31, சமிந்த பெர்னாண்டோ 27, சஞ்சீவ் குமாரஸ்வாமி 3/31, சஞ்சிக ரித்ம 2/17, நலின் பெரேரா 2/26.