இலங்கையில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள பங்களாதேஷ் அணி

176

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கையில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த போதும், இப்போது 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

IPL கிரிக்கெட்டில் களமிறங்கும் முதல் அமெரிக்க வீரர்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை செப்டம்பர் 27ம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், ஒக்டோபர் 23ம் திகதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில், போட்டி அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி செப்டம்பர் 27ம் திகதி இலங்கையை அடையும் பட்சத்தில் ஒக்டோபர் 14ம் திகதிவரை தங்களுடைய தேவைகளுக்கான நிதியை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், அதன் பின்னராக செலவுகளை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டிருந்தது. எனினும், இப்போதைய நிலையில் இந்த விடயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையுடன் மேற்கொண்ட இறுதி கலந்துரையாடல் தொடர்பில் நிஷாமுதீன் சௌத்ரி குறிப்பிடுகையில்,

“நாம் இலங்கைக்கு வருகைத்தரும் தினத்திலிருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எங்களுடைய திட்டங்களை வகுக்க முடியும். ஆனால், இலங்கை கிரிக்கெட் சபையின் மேலதிக தகவல்களுக்காகவும் நாம் காத்திருக்கிறோம். 

அதேநேரம், எமது வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் சிலர் நேரடியாக கொழும்பு வருவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கான விதிமுறைகள் தொடர்பிலும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாட வேண்டும். அதேநேரம், எம்முடன் பயணிக்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய விடயங்களை தொடர்புடைய அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் சபை எமக்கு வழங்கியுள்ளது.

Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபை சுகாதார அமைச்சுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதுடன், தனிமைப்படுத்தல் நாட்களை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது” என்றார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான அணி மற்றும் உயர் செயற்திறன் அணி என இரண்டு அணிகளுக்கான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 60 பேரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது. உயர் செயற்திறன் அணியானது இலங்கை வளர்ந்துவரும் அணியுடன் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளதுடன், பங்களாதேஷ் டெஸ்ட் அணியுடன் பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க