சாலிந்த உஷானின் சதத்துடன் நீர்கொழும்பு பதுரெலிய போட்டி சமநிலையில் முடிவு

151

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துடனான பிரீமியர் லீக் போட்டியை பதுரெலிய கிரிக்கெட் கழகம் சமநிலையில் முடித்துக் கொண்டபோதும் முதல் இன்னிங்சுக்கான புள்ளிகளை அந்த அணியால் வெல்ல முடிந்தது.

இதன் போது இளம் துடுப்பாட்ட வீரர் சாலிந்த உஷான் பதுரெலிய அணிக்காக சதம் ஒன்றை பெற்றதோடு நீர்கொழும்பு அணிக்கு பிரசன்சன ஜயமான்ன சதம் ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>நீர்கொழும்பின் வலுவான ஓட்டங்களுக்கு பதுரெலிய பதிலடி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட இந்த போட்டித் தொடரின் B குழுவில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாது மற்றும் கடைசி நாளான இன்று (08) பதுரெலிய கிரிக்கெட் கழகம் விக்கெட் இழப்பின்றி 130 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலேயே தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் நீர்கொழும்பு பந்துவீச்சாளர்கள் கடைசி நாளில் சிறப்பாக செயற்பட்டனர்.

இதனால் பதுரெலிய அணி மேலும் 203 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் அந்த அணி மொத்தம் 333 ஓட்டங்களை பெற்று நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தை விடவும் முதல் இன்னிங்ஸில் 5 ஓட்டங்களால் முன்னிலை பெற முடிந்தது.

இதில் 68 ஓட்டங்களுடன் இன்று தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த இடது கை துடுப்பாட்ட வீரர் சாலிந்த உஷான் 113 ஓட்டங்களை பெற்றார். இதில் பதுரெலிய அணிக்காக விளையாடும் முன்னாள் ஜிம்பாப்வே அணித்தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளர் டிடென்டா டைபூ 41 ஓட்டங்களை பெற்றார்.

2012 இல் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த 35 வயது டைபு, இலங்கை முதல்தர போட்டிகள் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதன் போது நீர்கொழும் அணி சார்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் உபுல் இந்திரசிறி 6 விக்கெட்டுகளையும் ஷெஹான் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

>>ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

இந்நிலையில் போட்டியின் கடைசி பாதியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 328 (122.3) – பிரசன்சன ஜயமான்ன 108, டிலசிறி லொக்குபண்டார 51, உப்புல் இந்திரசிறி 44*, அஞ்சலோ ஜயசிங்க 34, செஹான் ஜயசூரிய 21, புத்திக்க சஞ்ஜீவ 5/74, லஹிரு சமரகோன் 3/81

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 333 (123.3) – சாலிந்த உஷான் 113, அலங்கார அசங்க 82, டிடென்டா டைபூ 41, சச்சித் பத்திரண 34, கோசல குலசேகர 24, உபுல் இந்திரசிறி 6/120, செஹான் ஜயசூரிய 3/124

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 170/2 (20) – டிலசிறி லொக்குபண்டார 63, செஹான் ஆரச்சிகே 61, செஹான் ஜயசூரிய 42

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<