முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை இழக்கும் பாகிஸ்தான்?

Asia Cup 2023

86

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பாகிஸ்தானின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே திங்கட்கிழமை (11) நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுலின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது 

அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட வரவில்லை. இதனால் பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் இந்திய அணி வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டது 

அதில் ஹரிஸ் ரவூப் நேற்று போட்டி ஆரம்பமாகும் போதே காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டு பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து MRI Scan எடுக்க சென்றதாக கூறப்பட்டது. ஆதலால், அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பந்து வீச மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. 

நசீம் ஷா அவருடைய கடைசி ஓவரான போட்டியின் 49 ஆவது ஓவரை வீசியபோது (48.2 ஆவது ஓவர்) தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த ஓவரை இப்திகார் அஹமட் வீசினார் 

இந்த நிலையில், காயத்துக்குள்ளாகிய குறித்த 2 வீரர்களும் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ள இலங்கையுடனான போட்டியில் விளையாடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனினும், இருவரும் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் என்பதால், ஒருவேளை பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானால் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, காயமடைந்த இருவருக்கும் பதிலாக மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷாநவாஸ் தஹானி மற்றும் ஜமான் கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தான் அணியுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

இருப்பினும், ஹரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும் அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெளிவுபடுத்தியுள்ளது. 

சுபர் 4 சுற்றின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இலங்கைக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<