ஹொங்கொங்கையும் அதிரடியாக வீழ்த்திய இலங்கை அரையிறுதியில்

715
Netball Singapore

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இலங்கை வலைப்பந்து அணி சிங்கப்பூரின் OCBC அரங்கில் நடைபெற்ற E குழுவுக்கான தனது கடைசி போட்டியில் ஹொங்கொங் அணியை 71-48 என்ற புள்ளிகளால் வெற்றி பெற்றது.  

சிங்கப்பூர் (74-61) மற்றும் நடப்புச் சம்பியன் மலேசிய (62-59) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றியீட்டிய நிலையில் இலங்கை அணி மற்றொரு வெற்றியை பெற்று கிண்ணத்திற்கான பிரிவில் முன்னிலை பெறும் வாய்ப்புடனேயே வியாழக்கிழமை (06) இந்தப் போட்டியில் களமிறங்கியது.

மறுபுறம் நட்சத்திர அணியான சிங்கப்பூரை வீழ்த்திய உற்சாகத்துடனேயே ஹொங்கொங் போட்டியில் குதித்தது.

மலேசியாவுடனான த்ரில் வெற்றியுடன் தோல்வியுறாமல் முன்னேறும் இலங்கை அணி

தற்போது நடைபெற்று வரும் 11ஆவது ஆசிய வலைப்பந்து …

இந்த தொடரில் இலங்கை அணியில் பிரதான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனையாக உள்ள தர்ஜினி சிவலிங்கம் பந்தை பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலைக்குள் பந்தை செலுத்துபவராக (கோல் ஷூட்டர்) உள்ளமை இலங்கைக்கு மிகப் பெரிய பலமாகவே உள்ளது.

எனினும், இந்த தனித்துவமான அட்டத்தை முதல் கால்பகுதியில் ஹொங்கொங் வீராங்கனைகளால் முறியடிக்க முடியுமாக இருந்ததோடு, அது இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்தது.

இதே உத்தியை சிங்கப்பூர் மற்றும் மலேஷிய அணிகளிடமும் பார்க்க முடிந்ததோடு, அவர்கள் இலங்கையின் மத்தியகள வீராங்கனைகளை  தவறிழைக்க வைத்து திருப்பங்களை ஏற்படுத்தினர். இலங்கை ஆரம்பத்தில் பந்தை பரிமாற்றுவதில் தடுமாற்றம் கண்டபோதும் விரைவிலேயே ஆட்டத்தில் வேகம் காட்டி முதல் கால் பகுதி ஆட்டத்தில் 18-13 என முன்னிலை பெற்றது.  

இலங்கையின் தற்காப்பு ஜோடியான அணித்தலைவி சதுரங்கி ஜயசூரிய மற்றும் கயானி திசாநாயக்க ஆகியோர் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, பந்தை இலங்கை அணிக்கு சாதகமாக திசை திருப்பினர்.

இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அதில் 8-2 என தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்று ஹொங்கொங்கின் வாய்ப்புகளை சிதறடித்தது. இந்த கால் பகுதி அட்ட முடிவில் 21-12 என புள்ளிகளை அள்ளிய இலங்கை வீராங்கனைகள் முதல் பாதியில் ஸ்திரமான முன்னிலையை பெற்றனர்.    

முதல் பாதி: இலங்கை 39 – 25 ஹொங்கொங்  

களத்தில் அதிக பலத்தை செலவிட்டு வேகமாக ஆட முயன்றதால் ஹொங்கொங் வீராங்கனைகள் 3ஆம் கால்பகுதியில் வைத்து களைப்படைய ஆரம்பித்தனர். மறுபுறம் இலங்கை வீராங்கனைகள் எளிதான முறையில் ஆடியதோடு மத்தியகளத்தில் கயான்ஜலி அமரவன்சவின் ஆட்டம் இலங்கைக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது.  

இதனால் இந்த கால்பகுதி ஆட்டம் முந்தையவைகளை விடவும் மந்தமானமதாக இருந்ததோடு 15 நிமிடங்கள் முடிவில் புள்ளிகள் 54-35 ஆக உயர்ந்தது.  

நான்காவது கால் பகுதி இலங்கை தனது புள்ளிகளை அதிகரிப்பதாக இருந்ததோடு எதிரணியை விடவும் 20 கோல்களுக்கு மேல் முன்னிலை பெற முடியுமானது. ஹொங்கொங் வீராங்கனைகள் நேர்த்தியான அட்டம் ஒன்றை தொடர முடியாத நிலையில் அடிக்கடி பெனால்டிகளையும் விட்டுக்கொடுப்பதை காண முடிந்தது.

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

கோல் பெறுவதில் ஹஸிதா மெண்டிஸ் நீண்ட தூரத்தில் இருந்து சில பந்துகளை வலைக்குள் செலுத்தியபோதும், அது தர்ஜினி சிவலிங்கத்தை விடவும் குறைவாகவே இருந்தது. அவர் மீண்டும் ஒருமுறை இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.   

முழு நேரம்: இலங்கை 71 – 48 ஹொங்கொங்

வியாழக்கிழமை நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் மலேசிய அணிகளுக்கு இடையிலான மற்றைய போட்டியில் சிங்கப்பூர் 56-55 என பரபரப்பு வெற்றியை பெற்றுக் கொண்டது. எனினும், இந்த இரு அணிகளும் கிண்ணத்திற்கான E குழுவில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதியில் ஒருவரை ஒருவர் சந்திக்கவுள்ளனர்.

மறுபுறம் E குழுவில் அனைத்து போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற இலங்கை அரையிறுதியிலும் அந்தக் குழுவில் கடைசி இடத்தைப் பிடித்த இதே ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. இந்த அரையிறுதிப் போட்டிகள் வரும் சனிக்கிழமை (08) நடைபெறவுள்ளன.   

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…