கொழும்பு அணிக்காக ஹெட்ரிக் சதமடித்த கமிந்து மெண்டிஸ்

SLC Major League Tournament 2022

110

தமிழ் யூனியன் கழகத்துக்கு எதிராக கொழும்பு SSC மைதானாத்தில் நடைபெற்று வரும் மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கொழும்பு கிரிக்கெட் கழகம் கமிந்து மெண்டிஸின் சதம், அஷான் ப்ரியன்ஜன் மற்றும் சமிந்து விஜேசிங்கவின் அரைச் சதங்களின் உதவியுடன் போட்டியின் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவில் 149 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்றைய தினம் (19) தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி, ஆம்பத்திலேயே மினோத் பானுகவின் விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவர், 84 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்து ரவிந்து பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு கமிந்து மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த லசித் அபேரட்ன தமிழ் யூனியன் கழகத்தின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 4ஆவது விக்கெட்டுக்காக 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, 4ஆவது இலக்கத்தில் களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்தினார். இம்முறை மேஜர் லீக்கில் அவரது 3ஆவது சதம் இதுவாகும். அதேபோல, முதல்தர கிரிக்கெட்டில் 10ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

எனினும், 105 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கமிந்து மெண்டிஸும், 48 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் லசித் அபேரட்னவும் ரவிந்து பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனையடுத்து 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஷான் ப்ரியன்ஜன் மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகிய இருவரும் சத (123 ஓட்டங்கள்) இணைப்பாட்டமொன்றை முன்னெடுத்து அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில் அஷான் ப்ரியன்ஜன் 111 பந்துகளில் 52 ஓட்டங்களையும், சமிந்து விஜேசிங்க 139 பந்துகளில் 77 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு கொழும்பு கிரிக்கெட் கழகம் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 107 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இதேநேரம் தமிழ் யூனியன் கழகத்தின் பந்துவீச்சு சார்பாக ரவிந்து பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், ஷிரான் பெர்னாண்டோ, கவிந்து பத்திரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

நாளை (20) போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கழகம் – 558 (135) – சதீர சமரவிக்ரம 188, இசுரு உதான 88, நவோத் பரணவிதான 54, ரொன் சந்த்ரகுப்த 48, கவிந்து பத்தின 46, ரவிந்து பெர்னாண்டோ 45, விஷ்வ பெர்னாண்டோ 4/128, லக்ஷான் சந்தகென் 4/128

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 411/5 (107) – கமிந்து மெண்டிஸ் 105, மினோத் பானுக 75, சமிந்து விஜேசிங்க 71*, அஷான் ப்ரியன்ஜன் 52*, ரவிந்து பத்திரத்ன 3/81, ஷிரான் பெர்னாண்டோ 1/71

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<