இந்திய அணியின் தலைவராக மீண்டும் ஷிகர் தவான்?

185

இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய அணிக்கு தலைவராக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மனும் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  

19ஆவது ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவின் ஹன்சோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டி (T20I) இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஆனால், குறித்த இரண்டு தடவைகளும் இந்திய அணி பங்கேற்கவில்லை. 

இந்த நிலையில், இந்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு விழாவிற்கு இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை முதல் தடவையாக அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதுடன், ஆண்கள் அணியில் இந்திய பி அணியையும், வழக்கமான பெண்கள் கிரிக்கெட் அணியை அனுப்பவும் தீர்மானித்துள்ளது.   

இதனிடையே, ஆசிய விளையாட்டு விழாவில் களமிறங்கவுள்ள இந்திய அணிக்கு தலைவராக ஷிகர் தவானை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய விளையாட்டு விழா நடைபெறுகின்ற காலப்பகுதியில் இந்திய அணியை ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்தும் நோக்கில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியை அனுப்பவுள்ளது 

இந்திய அணியின் அனுபவமிகுந்த வீரரான ஷிகர் தவான் ஏற்கனவே இளம் வீரர்களை இந்திய அணியை வழிநடத்திய அனுபவமிக்கவர். அவரது தலைமையில் இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆடியுள்ளது 

மறுபுறத்தில் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவானுக்கு, சுப்மன் கில்லின் வருகைக்குப் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக ஷிகர் தவான் இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் களமிறங்கியிருந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக ஆடிய போட்டியும் இதுவே ஆகும். 

37 வயதான ஷிகர் தவான் 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் 2315 ஓட்டங்களையும், 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதங்கள், 39 அரைச் சதங்களுடன் 6 ஆயிரத்து 793 ஓட்டங்களையும், 68 T20I போட்டிகளில் ஆடி 11 அரைச் சதங்களுடன் 1759 ஓட்டங்களையும் எடுத்துள்ளார் 

ஆசிய விளையாட்டு விழாவில் களமிறங்கும் இந்திய அணிக்கு ஷிகர் தவான் தலைவராக நியமிக்கப்படவுள்ள செய்திகள் வெளியாகிய போதிலும், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி ஆசிய விளையாட்டு விழாவிற்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இதுதவிர, முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதேவேளை, இந்திய பெண்கள் அணியை பொறுத்தவரையில் அனுபவ வீராங்கனைகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹர்மன்பிரீத் கவுர் தலைவராக செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<