27ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கிய புனித பத்திரிசியார் கல்லூரி

535

2014 ஆண்டு பொன் அணிகளுக்கிடையிலான போரின்போது மைதானத்திற்கு வெளியே இடம்பெற்ற துக்ககரமான சம்பவத்தின் பின்னர், ஐந்து வருட இடைவெளியின் பின்னர் நூற்றாண்டினை நெருங்கும் பாரம்பரியத்தினை காப்பதுடன் இரு கல்லூரிகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும்முகமாக அடுத்த வருடம் முதல் இன்னிங்ஸ் போட்டியினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி சமூகத்தினர், இவ்வருடம் அதனுடைய முதல் கட்டமாக 27ஆவது முறையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான ஒரு நாள் போட்டித்தொடரினை வெற்றிகரமாக அரங்கேற்றியிருந்தனர்.

அதேவேளை, இரு கல்லூரி அதிபர்களும் அடுத்தவருடம் இருபதுக்கு இருபது தொடரினையும் தாங்கள் ஆரம்பிக்க இருக்கின்றோம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியினையும் வெளியிட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பத்திரிசியார் கல்லூரி அணியின் தலைவர் பியேட்றிக் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

புனித அந்தோனியாரை வீழ்த்தி டிவிஷன் II சம்பியனாகிய றோயல் கல்லூரி

மந்த கதியிலே போட்டியினை ஆரம்பித்த பத்திரிசியார் கல்லூரியினர் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து  38 ஓட்டங்களையே பெற்றிருந்தனர். 72 ஓட்டங்களுக்கு அடுத்த விக்கெட்டும் வீழ்த்தப்பட்டபோதும், தொடர்ந்தும் நிலைத்திருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டிலக்சன், கஸ்ரோவுடன் இணைந்து 91 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட்டிற்காக இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளையில் துரதிஷ்டவசமாக சதமொன்றிற்கான வாய்ப்பினை பறிகொடுத்து 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். களத்தடுப்பில் யாழ்ப்பாண கல்லூரி வீரர்கள் தடுமாற கஸ்ரோ நிதானமாக 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அதிரடியாக மொனிக் நிதுசன் 29 பந்துகளில் அரைச்சதத்தினை பெற்றுக்கொடுத்தார்.

பின்வரிசை விக்கெட்டுக்களை விரைவாக பறிகொடுத்த பத்திரிசியார் கல்லூரி 300 என்ற இமாலய வெற்றி இலக்கினை நிர்ணயித்தனர். யாழ்ப்பாண கல்லூரிக்காக பிரகேஷ் 4 விக்கெட்டுக்களையும், சிந்துஜன் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய யாழ்ப்பாண கல்லூரி இன்னிங்சில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட நகராத யாழ்ப்பாண கல்லூரி வெறுமனே 112 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர்

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிசாந் 15 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் அணித்தலைவர் பியேட்றிக் 3 விக்கெட்டுக்களையும், கஸ்ரோ மற்றும் டனீசியஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித பத்திரிசியார் கல்லூரி 299 (50) – டிலக்சன் 96, மொனிக் நிதுசன் 51,  கஸ்ரோ 45, பிரகேஷ் 4/32, சிந்துஜன் 3/56, கேசவன் 2/64

யாழ்ப்பாண கல்லூரி – 112 (43) – பியேட்றிக் 3/28,கஸ்ரோ 2/18, டனீசியஸ் 2/19

போட்டி முடிவு – 187 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றி

விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர் – டிலக்சன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர்- பிரகேஷ் ( யாழ்ப்பாண கல்லூரி)

சிறந்த சகலதுறை வீரர் – மொனிக் நிதுசன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பு வீரர்- ஐவன் றொசாந்தன் (புனித பத்திரிசியார் கல்லூரி)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க